ETV Bharat / state

நீதிபதிகளுக்கு மட்டுமல்ல; பொது மக்களுக்கும் மகிழ்ச்சி - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

author img

By

Published : Oct 20, 2021, 6:35 PM IST

முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்கள் குறைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை நேரில் அழைத்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டியுள்ளார்.

Judge
Judge

சிவாஜி கணேசனின் 96ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி சென்னை அடையாறு டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இதற்காகச் சாலைகளில் இரும்புத் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை நிறுத்திவைத்தனர். இதனால் அந்தச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலையில் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

அப்போது அந்த வழியாக வந்த உயர் நீதிமன்றம் வந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வாகனத்தையும் காவல் துறையினர் தடுத்துள்ளனர். இதனால் உயர் நீதிமன்றத்திற்கு 25 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரது பணி பாதிக்கப்பட்டது. எனவே இது குறித்து உள்துறைச் செயலர் முன்னிலையாகி விளக்கம் அளிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.

அதன்படி காணொலி காட்சி மூலம் உள்துறைச் செயலர் பிரபாகர் ஆஜராகி விளக்கமளித்து அந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில், சென்னையில் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உள்துறை செயலாளர் பிரபாகரை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது போக்குவரத்து நெரிசலை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களான கான்வாய் 14 இல் இருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் வரும் போது எதிரே வரும் வாகனங்களையும் தற்போது நிறுத்தி வைப்பது கிடையாது என உள்துறை செயலாளர் பிரபாகர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நீதிபதிக்கு அதிக அதிகாரம் உள்ளதாக நினைக்கவேண்டாம். அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியால் நீதிபதிகள் மட்டுமல்ல பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த தலைமை செயலாளர், டிஜிபி, உள்துறை செயலாளரின் முயற்சி பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் முதலமைச்சரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை அவமதித்ததாக கே.எஸ். அழகிரி மீது புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.