ETV Bharat / state

வனப்பகுதிகளில் அந்நிய மரங்களை அகற்ற தனிக்குழு அமைக்க வேண்டும்; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Oct 11, 2022, 6:27 PM IST

Updated : Oct 11, 2022, 9:52 PM IST

தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவும், கண்காணிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி குழுக்களை அமைக்க வனத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அகற்றப்பட்ட இந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு காகித நிறுவனத்துக்கு வழங்குவது குறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்கத் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அகற்றப்பட்ட அந்நியமரங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக, முதன்மை வனப் பாதுகாவலர், குழு ஒன்றை அமைத்துள்ளதாகக் கூறி அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கடந்த முறை இதுசம்பந்தமான கோப்பு நிதி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில், தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்பது நீதிமன்றத்தின் கண்ணியத்தைக் குலைப்பது ஆகாதா? எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, இந்த அறிக்கையைத் திரும்பப் பெறுவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், உயர் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மஞ்சள் பை இயந்திரம் வைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வனப்பகுதிகளில் அந்நியமரங்களை அகற்றுவது, கண்காணிப்பு மற்றும் பராமரிப்புக்கு என தனித்தனி குழுக்களை அமைக்க வேண்டும் என முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நரிக்குறவர் தீக்குளிப்பு...

Last Updated : Oct 11, 2022, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.