ETV Bharat / state

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து: நடிகை மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க உத்தரவு!

author img

By

Published : Apr 26, 2022, 7:35 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பி ஆடியோ பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகை மீரா மிதுனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மீரா மிதுனை கைது செய்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன்
நடிகை மீரா மிதுன்

சென்னை: நடிகை மீரா மிதுன் நடித்துள்ள 'பேய காணோம்' என்ற படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் குழுவில், தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குநர் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாக பேசி மார்ச் 16ஆம் தேதி மீரா மிதுன் ஆடியோ பதிவிட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தயாரிப்பாளர் சுருளிவேல் சென்னை மாநகர காவல்துறையில் அளித்த புகாரில், மீரா மிதுன் ஆடியோ வெளியிட்டு, சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்துவதாக சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவினர் மார்ச் 19ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி தமிழ்ச்செல்வி என்கிற மீரா மிதுன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆடியோ பதிவிட்டதாக கூறும் நாளில் துக்க நிகழ்வில் கலந்துகொண்டு இருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மீரா மிதுன், தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று (ஏப்ரல் 26) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இதேபோல ஒவ்வொருவர் மீதும் அவதூறு பரப்புவதையும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களையும் பதிவிடுவதே மீரா மிதுனுக்கு வாடிக்கை என்றும், தற்போது முதலமைச்சர் குறித்தும் அவதூறு பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே கைது செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, மீரா மிதுன் இதேபோன்று முன்பு எப்போது எதற்காக பேசினார், கைது செய்யப்பட்டாரா என்று காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், திரைத்துறையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களின் முன்னேற்றைத்தை விமர்சித்து பேசிய புகாரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள நிலையில் முதலமைச்சரை விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவில், முன் ஜாமீன் கோரிய மீரா மிதுன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.