பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

பத்ரி சேஷாத்ரி மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!
Badri Seshadri: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து அவதூறாக பேசியதாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சென்னையைச் சேர்ந்த பிரபல பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரி, மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து ஒரு யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்திருந்தார். அதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்து அவதூறாக பேசியதாக பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ப.கவியரசு என்பவர் கடந்த ஜூலை மாதம் புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து, பத்ரி மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த ஜூலை 30ஆம் தேதி அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். இதனையடுத்து, தன் மீதான வழக்கை பத்ரி சேஷாத்ரி ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், உள்நோக்கத்தோடு வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், இது ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சிக்கும் வகையில் தாம் பேசவில்லை எனவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதித்துறை மீது தாம் மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும் பத்ரி சேஷாத்ரி தரப்பில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், தம்முடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் பிரமாணப்பத்திரத்தில் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்தார். இதனையடுத்து பத்ரி சேஷாத்ரி மீது நீதிபதியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அக்.1 முதல் பழனி முருகன் கோயிலில் செல்போன் எடுத்துச் செல்ல தடை!
