ETV Bharat / state

2023ஆம் ஆண்டின் ஆசிய விளையாட்டு போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த தங்க தமிழர்கள்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 30, 2023, 3:21 PM IST

2023 Tamilnadu Sports Champions: சீனாவின் ஹாங்சோ நகரில் இந்தாண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களம்கண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பட்டியலை விவரக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

2023-ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த தங்கதமிழர்கள்
2023-ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டு போட்டியில் உலக கவனத்தை ஈர்த்த தங்கதமிழர்கள்

சென்னை: பிரிட்டிஷ் காலத்திற்குப் பிறகும் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்றது போல் கிரிக்கெட் விளையாட்டு இமய வளர்ச்சி அடைந்திருக்கிறது. தமிழ்நாடும் அதற்கு விதிவிலக்கு அல்ல. குறிப்பாக, இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் ரசிகர்களின் பலம் மற்ற விளையாட்டுகளுக்கும் உள்ளதா என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். ஆனால், இதிலிருந்து தமிழ்நாடு முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. வீரர்களின் திறமைகளை முன்னிறுத்தி அனைத்து விதமான விளையாட்டுக்களைத் தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற உலக கிரிக்கெட் கோப்பையின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு உற்சாகம் அளித்த சென்னை ரசிகர்கள் எப்போதும் தனித்துவமானவர்கள் தான். விளையாட்டுத் துறையை வளர்க்கும் நோக்கில் சர்வதேச அளவிலான வசதிகளை அரசுகள் செய்து தருவதன் மூலம் மற்ற விளையாட்டுகளைப் புத்துயிர் பெற வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது, தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் செஸ் போட்டியானது மாணவர்களுக்கு வைக்கப்பட்டது. அதேபோல் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சர்வதேச ஹாக்கி போட்டியின் போது, சில மாணவர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொறு சர்வதேச விளையாட்டின் போதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மேலும், பள்ளிகளிலே அவர்களின் திறமை கண்டறிய, இது ஒரு வாய்ப்பாகத் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செய்து வருகின்றன. மேலும், சென்னை மாநகராட்சி சார்பில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு இலவச பயிற்சியானது வழங்கப்பட்டு வருகிறது. இது மாணவர்களுடைய பெரும் உற்சாகத்தையும் விளையாட்டு ஆர்வத்தையும் அதிகரிக்கிறது.

வெவ்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாட்டால் இணைந்திருக்கும் இந்தியாவில் வெவ்வேறு மாநிலத்தில் இருக்கும் வெவ்வேறு விளையாட்டுகள் மூலம் தனிச்சிறப்பு பெற்றுத்திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, வடகிழக்கு மாநிலங்களில் - கால்பந்து, ஓடிஸாவில் - ஹாக்கி, ஹரியானாவில் - குத்துச் சண்டை என ஒவ்வொரு மாநிலங்களும் குறிப்பிட்ட விளையாட்டுகளைப் பின்பற்றி இயங்கி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் கபடி, கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில், 2023ஆம் ஆண்டு மட்டும் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி, ஹாக்கி போட்டி, சர்வதேச சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த வரிசையில், ஆசியாவில் முதல் முறையாக இரவு நேர ஃபார்முலா-4 கார் பந்தம் நடைபெற இருந்தது. ஆனால் "மிக்ஜாம்" புயல் மற்றும் மாபெரும் மழையால் போட்டி நடக்கமால் போனது. இந்த போட்டிக்காக விளம்பரம், பார்வையாளர்கள் கேலரிகளுக்கான குத்தகை, தடுப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தெருவிளக்குகள், சாலைகள் மறுசீரமைப்பு என சுமார் ரூ.30 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2023-இல் விளையாட்டில் சாதித்த தமிழர்கள்: சீனாவின் ஹாங்சோ நகரில் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வரலாறு காணாத அளவுக்குப் பதக்கங்களை வென்றது. ஆசியா விளையாட்டுக்காக இந்தியாவிலிருந்து சென்ற வீரர், வீராங்கனைகளில் 46 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆடவருக்கான இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ராம்குமார் ராமநாதன், சாகித் மைனேனி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

இதேபோல், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, அனாஹத் சிங், தன்வி கண்ணா, தீபிகா பள்ளிக்கல் ஆகியோர் கொண்ட மகளிர் அணி ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலம் பதக்கம் வென்றது. ஆடவர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த ஆனந்த் குமார் வேல்குமார், சித்தாந்த் ராகுல் கம்ப்ளே, விக்ரம் ராஜேந்திர இங்கேல், ஆர்யன் பால் ஆகியோர் கொண்ட அணி வெண்கலம் வென்றது. இதில் ஆனந்த் குமார் சென்னையைச் சேர்ந்தவர். மகளிர் ஸ்பீட் ஸ்கேட்டிங் 3000 மீ. போட்டியில் ஆரத்தி கஸ்தூரி ராஜ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

செஸ் போட்டியில்: உலக செஸ் விளையாட்டில் எப்போதும் இந்தியர்களுக்கென்று தனி இடம் உள்ளது. அதிலும் குறிப்பாக செஸ் என்றாலே அசைக்க முடியாத வீரர்களாகத் தமிழ்நாடு வீரர்கள் வலம் வருகின்றனர். விஸ்வநாதன் ஆனந்த்-க்கு பிறகு சதுரங்கத்தில் சிறப்பாக விளையாடி உலகளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இதில் குறிப்பாக, கிராண்ட் மாஸ்டர்களான பிரக்ஞானந்தா, குகேஷ், கார்த்திகேயன் முரளி உள்ளிட்ட தமிழ்நாடு செஸ் வீரர்கள் உலகளவில் முக்கிய இடத்தில் உள்ளனர்.

இதில் கார்த்திகேயன் முரளி கிளாஸிக் செஸ் போட்டியில் உலக சாம்ப்பியனாக இருக்கும் கார்ல்ஸனை வீழ்த்திய இரண்டாவது இந்தியர் என பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். இதைத்தொடர்ந்து தற்போது, இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டர் ஆகியுள்ளார் வைஷாலி ரமேஷ்பாபு. இவர் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மூன்றாவது பெண் கிராண்ட் மாஸ்டராவும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆகவும் வலம்வருகிறார் வைஷாலி.

தங்கத் தமிழர்கள்: ஆடவர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்விராஜ் தொண்டைமான், திருச்சி ரயில் நிலையத்தில் டிக்கெட் கலெக்டராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் நடைபெற்று முடிந்த 2023 ஆசிய விளையாட்டில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். ஆடவர் 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் அனஸ் முகமது யாஹியா, அமோஜ் ஜேக்கர், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.

அதைத்தொடர்ந்து, கலப்பு 4x100 மீ. தொடர் ஓட்டத்தில் முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ், வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன் ஆகியோர் கொண்ட அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இதில் வித்யா ராம்ராஜ், சுபா வெங்கடேசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக கலப்புத்தொடர் ஓட்டத்தில் இந்தியாவைத் தலைமைத் தாங்கி 3 தமிழ்நாடு விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றது இதுவே முதல்முறையாகும். 2023 -ஆம் ஆண்டு பல எதிர்பாராததை எதிர்பார்க்க வைத்த ஆண்டாக இருந்தாலும், விளையாட்டுத்துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருடமாகவும் வெற்றி ஆண்டாகவும் வலம்வருகிறது.

இதையும் படிங்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.. அப்படியென்ன என்ன ஸ்பெஷல்..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.