ETV Bharat / state

கனவு ஆசிரியர் விருதிற்கான தேர்வில் 380 ஆசிரியர்கள் தேர்வு! பள்ளிக் கல்வித்துறை அறிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 9:59 PM IST

Kanavu Asiriyar Award: தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கனவு ஆசிரியர் விருதிற்கான தேர்வில், 380 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வில், 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற 55 ஆசிரியர்கள் கல்விச் சுற்றுலாவிற்கு தகுதி பெற்றுள்ளனர்.

kanavu asiriyar
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில்

சென்னை: கனவு ஆசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த 8 ஆயிரத்து 96 ஆசிரியர்களில் 75 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 380 ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் திறனை வளர்க்கும் வகையிலும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கனவு ஆசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. மனிதனை மனித வளமாக மாற்றும் அரும்பணியில் தங்களை முழுவதும் அர்ப்பணித்து செயலாற்றி வரும் ஆசிரியர்களுள் மீத்திறன் படைத்த தனித்திறன் பெற்று விளங்கும் ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களது தொழில்சார் அறிவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு மேலும் சிறப்பான பல வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் “கனவு ஆசிரியர் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது.

2023 ஆம் ஆண்டிற்கான கனவு ஆசிரியர் விருதிற்கு முதலில் ஆன்லைன் மூலமாக நடைபெற்ற MCQ தேர்வில் (Multiple choice questions) 8096 ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட அளவில் தேர்வு மையங்களில் நடைபெற்ற முதல்நிலை தேர்வில் 1538 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

அதன்பின்னர், ஆசிரியர்களின் தனித்திறன்களைக் கண்டறிவதற்காக, ஆசிரியர்களின் நேரடி செயல்விளக்க வகுப்பறை செயல்பாட்டினை மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்ட தேர்வில் 964 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வுகளில் ஆசிரியர்களின் கற்பித்தல் அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள்கள் அறிவு, ஆசிரியர்கள் பாடங்களில் பயன்படுத்தும் கற்பித்தல் உத்திகள் உள்ளிட்டவை மதிப்பீடு செய்யப்பட்டன.

ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட மூன்றுகட்டத் தேர்வு முறைகளைத் தொடர்ந்து 75 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற 380 ஆசிரியர்கள் “கனவு ஆசிரியர் 2023” விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதற்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி இன்று வெளியிட்டுள்ளார்.

இதில் 162 இடைநிலை ஆசிரியர்கள், 177 பட்டதாரி ஆசிரியர்கள், 41 முதுகலை ஆசிரியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற 55 ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். பிற ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றும், விருதும் வழங்கப்பட உள்ளன. மேலும், இவர்களது திறன் மேம்பாட்டிற்கு உரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பணம் தராததால் ஆத்திரம்! கஞ்சா போதையில் தாயை அடித்து கொன்று வீட்டில் புதைத்த மகன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.