ETV Bharat / state

ரஜினி என்னை நடிகவேள் என்று புகழ்ந்தது ரொம்ப சந்தோஷம் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 11:02 PM IST

Jigarthanda Double X : சென்னையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அப்போது எஸ்.ஜே.சூர்யா ரஜினி என்னை நடிகவேள் எனக் கூறியது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.ஜே.சூர்யா மேடையில் பேசுகையில், “நல்ல வெற்றியைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்த படத்தை மக்கள் கொண்டாடினார்கள்.‌ இப்படியொரு வரவேற்பு படத்திற்கு கிடைத்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி. அவர்களின் தரம் உயர்ந்து இருக்கிறது. ஒரு எமோஷனல் சீனுக்கு ரசிகர்கள் கை தட்டும் அளவுக்கு வந்துவிட்டார்கள். தரமான படைப்புக்கு தரமான வெற்றி கிடைத்தது.

வார நாட்களில் தியேட்டர்களில் ரசிகர்கள் அதிகமாக வந்தனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் எங்கள் வெற்றியை கேக் வெட்டிக் கொண்டாடினர். கார்த்திக் சுப்புராஜை பொறுத்தவரை நாம் பேசுவதை விட நம் படம் பேச வேண்டும் என்று நினைப்பவர். இன்று அந்த படம் பேசுகிறது. நன்றியை சொல்வதில் ஸ்டோன் பெஞ்ச் என்றைக்கும் குறைந்ததில்லை. இறைவி படத்தில் நடிகனாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அது அப்படியே தொடர்கிறது. அதை கொடுத்ததும் கார்த்திக் சுப்புராஜ் தான்.

ரஜினிகாந்த், என்னை பாராட்டியது ரொம்ப சந்தோஷம். விஜய் சொன்னதைப் போல, கிட்டத்தட்ட தாவி பிடிப்பதை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்து விட்டார். ரஜினிகாந்த் படப்பிடிப்பிற்கு நடுவில் எங்கள் படத்தை பாராட்டி கடிதமாக எழுதினார். நாங்கள் யூனிட்டாக அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

தரமான படங்களை வசூல் ரீதியாக கொடுத்த இயக்குநர்களில் முக்கியமானவர் கார்த்திக் சுப்புராஜ். தலைவர் ரஜினிகாந்த் சொன்னது போல குறிஞ்சி மலர் என்று தான் கூற வேண்டும். இந்த படத்தில் கிடைத்த சிறந்த நண்பர் லாரன்ஸ் மாஸ்டர்.

மக்களுக்கு எப்போதும் ஒரு வித்தியாசம் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும். அப்படியாக லாரன்ஸ் மாஸ்டர் வித்தியாசமாக நடிக்கிறார். நான் நடிகனாக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால் ரஜினி, என்னை நடிகவேள் என்று புகழ்ந்தது ரொம்ப சந்தோஷம்” என்றார்.

அதன்பின் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தின் மேல் எங்களுக்கு ஒரு சின்ன நம்பிக்கை இருந்தது. இருந்தாலும் எப்படி இந்த படத்தை எல்லாரும் ஏற்று கொள்வார்கள் என்று சின்ன பயம் இருந்தது. இந்த டீம் தான் வெற்றிக்கு காரணம்.

ஜிகர்தண்டா முதல் பாகத்தில் வரும் ஒரு காட்சி தான், இரண்டாம் பாகம் எழுதலாம் என்று தோன்றியது. ஜிகர்தண்டா ரிலீஸ் ஆகி 9 வருடம் கழித்து தான் இந்த படத்துக்கான ( ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) கதை தோன்றியது. யானையை வைத்து எடுத்த காட்சியில், நான் நினைத்தது போலவே அந்த யானை நன்றாக நடித்தது. அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை.

பீட்சா படத்தில் இருந்து என்னுடைய எல்லா படத்திற்கும் சூப்பர் ஸ்டார் பாராட்டினார். இந்த படத்துக்கு அவர் பாராட்டியதை என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று. நான் எடுத்த படங்களில் பாசிட்டிவாக ரெஸ்பான்ஸ் இந்த படத்திற்கு முழுமையாக கிடைத்தது.

யானை, குதிரை போன்ற விலங்குகளை படப்பிடிப்பு நடத்தும் போது எப்படி வரும் என்று கொஞ்சம் பயம் இருந்தது. இந்த படத்தின் டீஸரை பார்க்கும் போதே, லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இரண்டு பேரும் படத்தை நன்றாகக் கொண்டு வருவார்கள் என்று தோன்றியது என்றார்.

அதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறுகையில், “எந்த மாதிரியான படங்கள் பண்ண வேண்டும். ரசிகர்களுக்கு எது பிடிக்கும் என்ற யோசனை எங்களுக்கு எப்போதும் இருக்கும். சில நேரங்களில் சில கதைகள் நமக்கும், ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

இப்போதைய காலகட்டத்தில் நல்ல படங்களுக்கான விதையாக இந்த படம் இருக்கும். தியேட்டரில் ரசிகர்கள் மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தின் இசைக்கு நிறைய வேலை இருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் படம் அடுத்து எப்போது தியேட்டருக்கு வரும் என்று எதிர்பார்த்து வந்த படம் இது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து இன்னும் சிறப்பான கதைகள் மற்றும் படங்கள் வரும் என்று நம்புகிறேன். இதே மாதிரி படங்கள் பிடித்தால் இதே மாதிரிக் கொண்டு போவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

இதையும் படிங்க: தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள 5000 பணியிடங்கள் ஒரு மாதத்திற்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.