ETV Bharat / state

'முதலமைச்சரின் கனவை நிறைவேற்றுவது துணைவேந்தர்களின் கடமை' - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : Aug 30, 2022, 7:50 PM IST

துணைவேந்தர்களுக்கு முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் கடமையுள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கருத்து தெரிவித்துள்ளார்.

’முதலமைச்சரின் கனவை நிறைவேற்றுவது துணைவேந்தர்களின் கடமை’ - அமைச்சர் பொன்முடி கருத்து
’முதலமைச்சரின் கனவை நிறைவேற்றுவது துணைவேந்தர்களின் கடமை’ - அமைச்சர் பொன்முடி கருத்து

சென்னை: முதலமைச்சரின் கனவை நிறைவேற்றும் பணியும், கடமையும் துணைவேந்தர்களுக்கு உள்ளது எனவும், அதனை செயல்படுத்த வேண்டும் எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசும்போது, ”நாட்டின் வளர்ச்சிக்காக தான் ’நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த வேண்டும். ஐஏஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களுக்கான பயிற்சியை கல்லூரிகளில் வழங்கவேண்டும்.

போட்டித் தேர்வுகளை எழுதும் எண்ணத்தையாவது மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். தேவை ஏற்பட்டால் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு அருகில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் கணினி குறித்த பயிற்சியை வழங்க வேண்டும். எல்லா மாணவர்களுக்கும் அனைத்து பயிற்சியும் வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தனித்துவமாக கல்விக்கொள்கை அமைக்க கல்விக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து துணை வேந்தர்களுக்கும் நமது மாநில கல்விக்கொள்கைக்கான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு உயர்கல்வி மேம்பாட்டிற்கான கருத்துகளையும் துணைவேந்தர்கள் வழங்கவேண்டும்.

பல்கலைக்கழகங்களின் பெரிய குறைபாடாக ஆசிரியர் நியமனம் உள்ளது. பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதும் குறைபாடாக உள்ளது. முதலமைச்சரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளாக கல்லூரிகளில் பணியாற்றியவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக தடைபட்ட அனைத்து சலுகைகளும் தற்போது வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள 4000 உதவிப்பேராசிரியர் பணிக்கும், கௌரவ விரிவுரையாளர்கள் 1895 பேரையும் நிரப்பிட முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார். முதலமைச்சரின் கனவை நிறைவேற்றிடும் பணியும், கடமையும் துணைவேந்தர்களுக்கு உள்ளது. அதனை அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களும் செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எட்டு வழி சாலை விவகாரத்தில் அரசு உறுதியான நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.. அண்ணாமலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.