ETV Bharat / state

ஊரடங்கினால் மீண்டும் தலைதூக்கும் சட்டவிரோத மது விற்பனை!

author img

By

Published : Apr 20, 2020, 12:12 AM IST

Updated : Apr 20, 2020, 12:23 AM IST

சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், தமிழ் நாட்டில் மீண்டும் சட்டவிரோத மது விற்பனை தலைதூக்கியுள்ளது என மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Illegal alcohol  சட்ட விரோத மது விற்பனை சிறப்பு தொகுப்பு  சென்னை சட்ட விரோத மது விற்பனை  மது விற்பனை  Chennai Illegal alcohol  சட்ட விரோத மது விற்பனை  Chennai Illegal alcohol Sales  Illegal alcohol Story
Chennai Illegal alcohol

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மதுபானக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால், மதுபோதைக்கு அடிமையான சிலர் மதுபானம் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக மது கிடைக்காத மன உளைச்சலில் வீட்டில் உள்ள பெண்கள் மீது வன்முறையில் ஈடுபட்டும் வருகின்றனர். மேலும் வீட்டிலேயே சிலர் சமூக வலை தளத்தைப் பார்த்து கள்ளச்சாராயத்தை காய்ச்சி குடித்தும் வருகின்றனர். ஆனால், சிலர் மதுபானக் கடை மூடுவதற்கு முன்பு, மதுபாட்டில்களை வாங்கிப் பதுக்கி வைத்துள்ளனர்.

மதுகிடைக்காமல் பெரும்பாலான நபர்கள் விரக்தியில் இருக்கும் சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட சில விஷமிகள் பதுக்கி வைத்த மதுபானத்தை நான்கு மடங்கு கூடுதல் விலைக்கு போதை ஆசாமிகளுக்கு விற்று வருகின்றனர்.

அவர்களும் வேறு வழியின்றி விலையைப் பார்க்காமல், கிடைத்ததை வாங்கி, குடித்து வருகின்றனர்.

இது குறித்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது," இந்த சட்ட விரோத மதுபான விற்பனை குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மீண்டும் சட்டவிரோத மது விற்பனை தலைதூக்கியுள்ளதால் அதைத் தடுக்கும் விதமாக மதுபானம் விற்கும் நபர்களைக் கண்டறிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக மதுபானம் விற்கும் நபர்களை கண்காணித்து, மது விற்பனை செய்து வந்த இடங்களில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், வடக்கு மண்டலத்தில் சட்ட விரோதமாக 111 பேர் மதுபானம் விற்றுள்ளனர். அதில், 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் மத்திய மண்டலத்தில் 16 பேரும், மேற்கு மண்டலத்தில் 6 பேரும், கிழக்கு மண்டலத்தில் 44 பேரும் என மொத்தம் 99 பேரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 112 பேரை வலைவீசி தேடி வருகிறோம். இதில், குறிப்பாக விழுப்புரத்தில் அதிகப்படியாக 23 பேர் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைப்போல சென்னையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, டிக்டாக்கை பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சி குடித்த இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுபானக் கடை மூடி உள்ளதால் போதைக்கு அடிமையான சிலர் கஞ்சா, இருமலுக்கான மருந்தை போதையாகப் பயன்படுத்தி வருவதும் அதிகரித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பதை முழுவதுமாக தடுக்க காவல் துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மதுபான குடோனில் மதுபாட்டில்கள் திருட்டு: இருவர் கைது!

Last Updated : Apr 20, 2020, 12:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.