ETV Bharat / state

IIT Madras - தேசிய கல்விக்கொள்கை அடிப்படையில் டிப்ளமோ வழங்க முடியுமா என்பது குறித்து ஆலோசனை

author img

By

Published : Jul 18, 2023, 9:56 PM IST

Updated : Jul 18, 2023, 10:28 PM IST

தேசிய கல்விக் கொள்கை 2020ல் அடிப்படையில் சென்னை ஐஐடியில் புதிதாக பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டு நடத்தப்பட்டு வருவதாகவும், மாணவர்களை தொழில் முனைவராக உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும், ஐஐடியில் நேரடி வகுப்பில் பி.டெக் படிக்கும் மாணவர்கள் இடையில் தொழில் முனைவோராக விரும்பினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்க முடியுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி

சென்னை: ஐஐடி மெட்ராஸ்(IIT Madras) அனைவருக்கும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பு, இடைநிலை இரட்டைப் பட்டப்படிப்பு போன்றவற்றின் மூலம் தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-யை செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களுக்கு பலகட்ட நுழைவு மற்றும் வெளியேறும் விருப்பங்கள், பாடத்திட்ட மாற்றத்தை வழங்குதல், தொழில்நுட்ப மாணவர்களுக்கான மானுட நிபுணத்துவத்தை செயல்படுத்திக் காட்டுதல் போன்றவையும் செயல்படுத்தி வருகிறது.

மத்திய உயர் கல்வி நிறுவனப் பிரிவின்கீழ் அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் போர்ட்டலில் (https://www.abc.gov.in/) சென்னை ஐஐடி-யைச் சார்ந்த 491 மாணவர்கள் இதில் பதிவு செய்திருக்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் சென்னை ஐஐடியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதன் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, "சென்னை ஐஐடி கிராமங்களில் ஊரக கலந்தாலோசனை மையங்களை (RICs) தொடங்கியுள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த ஆசிரியர்களை அழைத்து வருவதில் இது கவனம் செலுத்துகிறது. ஸ்மார்ட் டிவி, இணைய வசதிகளுடன் கிராமக் கல்வி மையங்கள் நிறுவப்படுகின்றன.

8, 9, 10, 11 மற்றும் 12ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு ஊரக கலந்தாலோசனை மையங்கள் சேவையாற்றுகின்றன. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, நேரடி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அனுபவம் மிக்க ஆசிரியர்கள் தாய்மொழியில் அறிவியல், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களைக் கற்பிக்கின்றனர்.

தமிழகத்தில் 89 கிராமங்களும், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் 100 கிராமங்களும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றன. 189 ஊரக மையங்கள் மூலம் 12,000 மாணவர்கள் இப்பாடத் திட்டத்தில் இணைந்துள்ளனர். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர், வேதியியலில் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர், 98 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை இப்பாடத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளனர்.

'அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்' திட்டத்தின் கீழ் ASHA அமைப்பின் கூட்டாண்மையுடன், தமிழகத்தில் தொலைதூர மற்றும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியலை பயிற்றுவிக்கும் விதமாக ஊரகத் தொழில்நுட்ப மையம் நிறுவப்பட்டுள்ளது.

பி.எஸ். பட்டப்படிப்பு திட்டத்தில் நான்கு நிலைகள் உள்ளன. டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்தில் ஒருவர் பி.எஸ். பட்டம் பெற நான்கு நிலைகளையும் வெற்றிகரமாக முடித்திருக்க வேண்டும். எந்த நிலையிலும் வெளியேறும் நெகிழ்வுத் தன்மையும் உண்டு.

கற்று முடித்த பாடத்திட்டங்கள், கிடைக்கப் பெற்ற திறன்கள் ஆகியவற்றைப் பொறுத்து, சென்னை ஐஐடியின் Centre for Outreach and Digital Education எனப்படும் அடிப்படை சான்றிதழோ, ஐஐடி மெட்ராஸ்-ன் டிப்ளமோ சான்றிதழோ பெற முடியும். அதேபோன்று புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்சில் பி.எஸ்சி பட்டமோ, டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்சில் பி.எஸ் பட்டமோ பெற முடியும்.

சென்னை ஐஐடியில் தொடங்கப்பட்டுள்ள பி.எஸ்சி மெடிக்கல் சயின்ஸ் நேரடி பாடப்பிரிவில் உள்ள 30 இடங்களுக்கு சுமார் 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் வளர்ந்துவரும் தேவைகளைத் தக்க வைக்கும் வகையில், 2018-ம் ஆண்டில் இடைநிலை இரட்டை பட்டப் படிப்பு (Interdisciplinary Dual Degree - IDDD) என்ற பாடத்திட்டத்தை ஐஐடி அறிமுகப்படுத்தியது.

IDDD-யுடன் மாணவர்கள் இணைந்து இளங்கலைப் பட்டம், முதுகலைப் பட்டம் ஆகியவற்றைப் பெறுவதன் மூலம் தொழில்நுட்பத்தின் புதிய பகுதிகள், அவற்றின் போக்குகளை கற்றுணர முடியும். இந்தப் படிப்புகள் ஐஐடி மெட்ராஸ்-ன் IDDD பிரிவில் ஐந்தாண்டு பாடத் திட்டங்களில் இடம்பெற்றவையாகும். இந்த பாடத்திட்டங்கள் பல்துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியக் கல்விக் கொள்கையால் தான் ஐஐடியின் புதிய வளாகம் கிழக்கு ஆப்பிரிக்காவில், தான்சானியா நகரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு இளநிலைப் படிப்பில் நேரடியாக 50 மாணவர்களும், முதுகலைப் படிப்பில் 20 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். அந்த நாட்டில் இருந்து 25 மாணவர்களும் சர்வதேச அளவில் 25 மாணவர்களும் இளங்கலை படிப்பில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம்.

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மேலும் புதிதாக சில பாடப்பிரிவுகளை தொடங்குவதற்கும் திட்டம் வைத்துள்ளோம். மேலும் தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்திடம் பி.எட் பட்டப்படிப்பு தொடங்கவும் அனுமதி பெற்றுள்ளோம். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் சென்னை ஐஐடியில் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உள்ளே வந்து பார்ப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு அறிவித்துள்ள மாதிரி பாடத்திட்டத்தினை திரும்பப்பெறக்கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Last Updated : Jul 18, 2023, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.