ETV Bharat / state

சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்; மாணவர் ஆசிரியர் நல்லுறவு மேம்படுத்த நடவடிக்கை - இயக்குநர் காமகோடி

author img

By

Published : Feb 14, 2023, 10:08 PM IST

சென்னை ஐஐடியின் மாணவர்கள், பேராசிரியர்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்திக் கொடுக்கவும், தற்கொலை செய்து கொண்ட மாணவர் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

IIT Director Kamakoti said  improve student teacher relationship in Chennai IIT
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்

சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர், ஸ்ரீவன் சன்னி ஆல்பட்(25). இவர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஐஐடியில் எம்.எஸ். எலக்ட்ரிகல் பாடப்பிரிவில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வந்த ஸ்ரீவன் சன்னி நேற்று இரவு விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் போலீசார், ஸ்ரீவன் சன்னி உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மாணவன் ஸ்ரீவன் சன்னி கடந்த இரண்டு மாதங்களாக ரிசர்ச் வகுப்பிற்கு சரியாக செல்லாமல் இருந்து வந்ததும், இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல ஐஐடியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த கர்நாடகாவைச் சேர்ந்த மாணவன், விவேஷ்(21) நேற்று இரவு தான் தங்கியிருந்த மாத்தாங்கண்ணி விடுதி அறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விடுதி அறையில் மயங்கி கிடந்த மாணவன் விவேஷை சக மாணவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததால் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஒரே நாளில், ஒரு மாணவர் தற்கொலை மற்றும் ஒரு மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், ஐஐடி வளாகத்தில் பேராசிரியர்களின் டார்ச்சர் காரணமாக மாணவர்கள் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயலுவதாகக் கூறி சக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் நேற்று இரவு முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மாணவர்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தற்கொலை சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் சென்னை ஐஐடி நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே உறவு பலப்படுத்தப்படும் எனவும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஐடியில் தொடரும் மாணவர்கள் தற்கொலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

இதையும் படிங்க: 'ஏங்க... ஒர்க் ஷாப் தொழிலுக்கு பெண்கள் வரக்கூடாதா..?' - வல்கனைசிங் வேலையில் அசத்தும் குட்டியம்மாள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.