ETV Bharat / state

மீனவர்கள் கடற்கரையில் மீன் விற்கக்கூடாது என்றால், நீங்கள் கடலுக்குள் பேனா வைக்கலாமா? - சீமான் ஆவேசம்

author img

By

Published : Apr 18, 2023, 4:57 PM IST

மீனவர்கள் கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்றால் கடலுக்குள் நீங்கள் பேனா வைக்கலாமா? அதற்கு பதில் சொல்ல முடியுமா? அது சுற்றுச்சூழலைப் பாதிக்காதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நொச்சிகுப்பம் சாலையில் உள்ள மீன் கடைகளை, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் இன்றும் சாலையின் நடுவில் ஐஸ் பெட்டிகள், மரக்கட்டைகள், படகுகளை குறுக்கே வைத்தும், மீன்களையும், நண்டுகளையும் சாலையில் கொட்டியும், வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் போராடும் நொச்சிக்குப்பம் மற்றும் பட்டினப்பாக்கம் மீனவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எங்களுடைய மீனவ மக்களின் இந்த இடத்தை அரசு எடுக்கும்போது காலையில், மாலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம்.

மற்ற நேரத்தில் மக்களை ஒரு தொந்தரவும் செய்யமாட்டோம் என்று சொல்லி தான், இந்த சாலையை மக்களிடம் இருந்து எடுத்துக்கொண்டனர். நிரந்தர கட்டடம் கட்டி மீன் கடைகளை மக்கள் போடவில்லை. இந்த இடத்தை காலி செய்ய வேண்டிய அவசியம் என்ன என கூறுங்கள். மீனவர்கள் கடற்கரையில் மீன் விற்கக் கூடாது. ஆனால், நீங்கள் கடலுக்குள் பேனா வைக்கலாமா? அதற்கு உங்களிடம் பதிவு உள்ளதா? நான் மீன் விற்கக்கூடாது. நீங்கள் கடற்கரையில் மிகப்பெரிய சமாதியை கட்டுவது ஏற்புடையதா'' என கேள்வி எழுப்பினார்.

''மக்கள் கடற்கரையில் உட்கார்ந்து மீன் விற்கக் கூடாது என்று சொல்லிய நீதிமன்றம் தான், உலகில் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையில் இவர்களை புதைத்துக்கொள்ளலாம் என அனுமதி கொடுத்துள்ளது. ஒவ்வொருவர் சமாதியும் 2 ஏக்கரில் உள்ளது, சமாதிகளைக் கட்ட அரசு காட்டும் வேகத்தை ஏன் மீன் சந்தை கட்டுவதில் காட்டவில்லை.

மக்களின் இந்த இடத்தில் மீன் விற்பதால் யாருக்கு என்ன இடையூறு வந்தது. வட இந்தியர்களுக்காக பேசுபவர்கள் ஏன் இவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை. நீதிபதி இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தான் இந்த மக்களின் நீண்ட கால வாழ்வாதாரம், மக்களைப் பார்க்கும்போது இதயம் மிகவும் கனமாக உள்ளது. நீதிமன்றம் இதுவரை சொல்லியதை அரசு உடனே நிறைவேற்றி உள்ளதா? அரசு இதை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்யவில்லை. தற்போது இந்தப் பகுதிகளில் நடக்கும் மீனவர்களின் போராட்டம் நாடெங்கும் வெடிக்கும்.

நான் நாளையும் இந்த இடத்திற்குப் போராட்டத்திற்கு வருவேன். இந்த இடத்தில் கடையை வைத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும். மீனவர்கள் கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்றால், கடலுக்குள் நீங்கள் பேனா வைக்கலாமா? அதற்கு பதில் சொல்ல முடியுமா? அது சுற்றுச்சூழலைப் பாதிக்காதா? நாங்கள் ஒரு குடையை வைத்துக்கொண்டு மீன் விற்றால் சுற்றுச்சூழலைப் பாதித்துவிடும் என்று கூறுவது ஏற்புடையதல்ல" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பரஸ்பர சகாயநிதி நிறுவன மோசடி வழக்கில் 3 பெண் இயக்குநர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.