ETV Bharat / state

அனுமதி உபரிக்கு.. அள்ளுவதோ சவுடு! ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jun 3, 2020, 2:25 AM IST

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் உபரி மண் எடுக்க அனுமதி பெற்று ஆற்று மணலை சிலர் அள்ளிவருவதாக தாக்கல் செய்த மனு தொடர்பாக தமிழ்நாடு கனிம வளத்துறை இயக்குனர் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தனர். அதில், "சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, பாப்பாகுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்தால் வழங்கக்கூடிய அனுமதியை கொண்டு பொக்லைன் இயந்திரம் மூலம் 100 அடி ஆழத்திற்கு மணல் தோண்டி எடுக்கின்றனர்.

இந்தப் பகுதிகளில், உயர்ந்த மண்மேட்டை சமப்படுத்துவது மற்றும் பள்ளத்தை மேடாக்குவது போன்ற விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், இவர்கள் இந்த அனுமதியை முறைகேடாக பயன்படுத்தி அதிக அளவில் ஆழமாக மணலை எடுத்து விற்பனை செய்கின்றனர்.

இவ்வாறு முறைகேடாக ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்து வருவதால், அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி நிலத்தடி நீர், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தநிலையில் தனியார் நிலத்தில் மண் எடுக்க அனுமதி கேட்டு, பலர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்துள்ளனர்.

ஆகவே, சிவகங்கை மாவட்டத்தில் சவுடு, உபரி மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "ஏற்கனவே மதுரை சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி தற்போது சவுடு மணல் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.

எனவே மணல் அள்ள கொடுக்கப்பட்ட அனுமதிகளை ரத்து செய்ய வேண்டும்" என வாதிடப்பட்டது. இதையடுத்து மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிமவளத்துறை இயக்குனர் ஆகியோர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.