ETV Bharat / state

கரோனா தடுப்பூசி முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் - ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Aug 20, 2021, 4:13 PM IST

Updated : Aug 20, 2021, 5:09 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் விகிதம் 1 விழுக்காடாக குறைந்துள்ளதாகவும், 21 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், பொது மக்கள் தங்கள் பகுதியில் முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகலாம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா தடுப்பூசி
கரோனா தடுப்பூசி

சென்னை : தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசிகள் சேமிப்பு கிடங்கிற்கு இன்று வந்த கோவிஷீட்டு தடுப்பூசிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

குறைந்த கரோனா தொற்று


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டிற்கு இன்று 6.93 லட்சம் தடுப்பூசி வந்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக 21 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. இதுவரை அரசு மற்றும் தனியார் இணைந்து 2.7 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் 1 விழுக்காடாக குறைந்துள்ளது. தஞ்சாவூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் 1 விழுக்காட்டிற்கு மேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவல் விகிதம் 1 விழுக்காட்டிற்கும் கீழே உள்ள மாவட்டங்களில் பூஜ்ஜியத்திற்கு கொண்டு செல்வதற்கும், 1 விழுக்காட்டிற்கு மேல் உள்ள மாவட்டங்களில் 1 விழுக்காட்டிற்கு குறைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக கரோனா பரவல் இருந்தால் போதுமானது. ஆனால் தமிழ்நாட்டில் கரோனா பரவல் சராசரி 1 விழுக்காடாக உள்ளது. கல்லூரிகள் திறந்தபின்னர் மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் சேலத்தில் 13 மாணவிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்பட்டோர் என அனைவருக்கும் தடுப்பூசி என்கிற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறோம். தடுப்பூசி போட்டுக்கொண்டால் நோய் வராமலும், பாதிப்பை குறைக்கவும் முடிகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது தடுப்பூசி அதிகமாக உள்ளது. ஆனால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் அமைக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை கண்டறிந்து தடுப்பூசி போட உள்ளோம். தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் இரண்டிலும் சேர்த்து 2.7 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

போலி தடுப்பூசி இல்லை

தமிழ்நாட்டில் போலி தடுப்பூசி என்கிற நிலை இல்லை . மத்திய அரசால் அங்கீகாரம் வழங்கியவை மட்டுமே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. கோவின் செயலியில் பல்வேறு தவறுகள் நிகழ்ந்துள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து பேசிய பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம்,
பள்ளிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பிலும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தயாராக உள்ளோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க :சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

Last Updated :Aug 20, 2021, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.