ETV Bharat / state

இணை நோயால் இறந்தவரின் சான்றிதழை ஆராய நிபுணர் குழு -  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jun 11, 2021, 1:50 PM IST

கரோனா காலத்தில் இணை நோய்களால் மரணமடைந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HC
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "கரோனா தொற்று பாதித்து உயிரிழக்கும் நபர்களுக்கு, கரோனா காரணமாக மரணம் என இறப்பு சான்றிதழ்களில் குறிப்பிடப்படாததால், மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிவாரண உதவிகள் மறுக்கப்படுகிறது.

சக வழக்கறிஞர் கண்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். கரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைப்படுகிறது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கரோனா மரணங்கள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதுமே குறை கூறப்படு வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கரோனா பாசிடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட மரணங்களை கரோனா மரணங்கள் என பதிவு செய்வதில்லை என தெரிவித்த நீதிபதிகள், மரணம் குறித்த தெளிவான பதிவுகள் இருந்தால் தான், எதிர்காலத்தில் தொற்று பரவலை சமாளிப்பது குறித்து ஆய்வு செய்ய முடியும்.

இறப்புகளைத் துல்லியமாகக் குறிப்பிடுவது, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும்.இணை நோய்கள் உடையவர்களும் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால், கரோனா காலத்தில் வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கை குறித்த ஆரம்பக்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.