ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் 6 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல்... 4,049 பேர் கைது

author img

By

Published : Aug 3, 2021, 11:04 PM IST

தமிழ்நாடு முழுவதும் ரூ. 6 கோடி மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4,049 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gutka worth Rs 6 crore seized across Tamil Nadu  Gutka seize  குட்கா பறிமுதல்  தமிழ்நாடு முழுவதும் குட்கா பறிமுதல்  crore seized across Tamil Nadu  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  Gutka  குட்கா
குட்கா பறிமுதல்

சென்னை: போதை ஏற்படுத்தும் குட்கா விற்பனையைத் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் வாகனத் தணிக்கை செய்யப்பட்டதில் 8 இரு சக்கர வாகனங்கள், 7 கார்கள், 5 வேன்கள், 3 லாரிகளில் குட்கா கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு அவ்வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்கா பறிமுதல்

மேலும் காவல்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் வணிக வளாகங்கள், கடைகள், குடோன்கள் போன்ற இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் வடக்கு மண்டலத்தில் 1,367 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,397 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்; மத்திய மண்டலத்தில் 257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 260 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் 1,154 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,119 குற்றவாளிகளும்; தெற்கு மண்டலத்தில் 691 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 693 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்குகள்

அதேபோல, சேலம் மாநகரத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 குற்றவாளிகளும்; கோயம்புத்தூர் மாநகரத்தில் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 42 குற்றவாளிகளும்; திருப்பூர் மாநகரத்தில் 71 வழக்குகளில் 73 குற்றவாளிகளும்; திருச்சி மாநகரத்தில் 70 வழக்குகளில் 70 குற்றவாளிகளும்; சென்னை மாநகரத்தில் 343 வழக்குகளில் 357 குற்றவாளிகளும்; மதுரை மாநகரத்தில் 28 வழக்குகளில் 28 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 4,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,049 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டன் கணக்கில் கைபற்றல்

இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 29, 30ஆம் தேதிகளில் சேலம் மாநகரத்தில் குட்கா/புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு சரக்கு வாகனங்களில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இரு இடங்களில் நடத்திய சோதனைகளில் 3 லாரிகள் மற்றும் ஒரு பொலிரோ காரில் வைத்திருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய 9.78 டன் குட்கா/புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், மொத்தமாக மாநிலம் முழுவதும் ரூ. 6.04 கோடி மதிப்புள்ள 30 ஆயிரத்து 399 கிலோ குட்கா/புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

குட்கா கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்து குண்டர் தடுப்புச் சட்டத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்; குட்கா விற்பனை பற்றிய தகவல் தெரிந்தால் பொது மக்கள் dgp@tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் எனவும்; தகவல் தெரிவிப்பவர்கள் பெயர், விலாசம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனையில் கொடைக்கானல் நகரம்... என்ன நடக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.