ETV Bharat / state

மகளிர் தினத்தில் சென்னை மேயர் பிரியா ராஜனின் முதல் மேடைப் பேச்சு!

author img

By

Published : Mar 8, 2022, 10:53 PM IST

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் பேசிய சென்னை மேயர் பிரியா ராஜன், ’பெண்களை தூக்கி பேசுவதோ, ஆண்களை தாழ்த்தி பேசுவதோ சமத்துவம் கிடையாது’ என்றார்.

பிரியா ராஜன்
பிரியா ராஜன்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா இன்று (மார்ச் 8) எழும்பூர் ரிப்பன் கட்டடத்திலுள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கிய இந்நிகழ்வில், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

'நிலையான நாளைக்காக, இன்றைய பாலினச் சமத்துவம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தனது முதல் மேடைப் பேச்சினை நிகழ்த்தினார்.

பிரியா ராஜன் பேச்சு

நிகழ்ச்சியில் பேசிய பிரியா ராஜன், "நான் பெண்ணாக பிறந்ததற்கு மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன். நாட்டுக்கு பெண்கள் எவ்வளவு முக்கியம் என்பதை உள்ளாட்சித் தேர்தலில் 50% இட ஒதுக்கீடு கொடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் பெருமைப்படுத்தியுள்ளார்.

பெண்களை தூக்கி பேசுவதோ, ஆண்களை தாழ்த்தி பேசுவதோ சமத்துவம் கிடையாது. பெண்களின் முன்னேற்றத்திற்குப் பின்னால் கண்டிப்பாக ஒரு ஆண் இருப்பார். அவர்கள் அப்பா, சகோதரர், கணவர் என யார் வேண்டுமானாலும் இருக்கலாம். மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அளவு சிறப்பாக செயல்படுவேன்"என்றார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சர்வதேச மகளிர் தின விழா

தொடர்ந்து துணை மேயர் மகேஷ் குமார் மேடையில் பேசியபோது, "எப்போதும் ஆண்களை விட ஒரு படி மேலானவர்கள் பெண்கள். எங்களை இயக்குபவர்களே பெண்கள் தான். எனக்குத் திருமணம் முடிந்தவுடன் முதல் குழந்தை பெண் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆசைப்படியே பெண் குழந்தை பிறந்தது" எனத் தெரிவித்தார்.

கலை நிகழ்ச்சிகள்

முன்னதாக பேசிய சென்னை மாநகரட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "1908ஆம் ஆண்டு உலக பெண்கள் தினம் முதன்முதலாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது. உலக பெண்கள் தினத்தில் பாலினச் சமத்துவம், பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கான மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரத்தின் தலைவர் ஒரு பெண்ணாக உள்ளார். இது தான் பெண்கள் மேம்பாடு" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பரதநாட்டியக் கலைஞர்கள், பறையிசைக் கலைஞர்கள், சிலம்பம் மற்றும் சுருள்வாள் கலைஞர்கள் மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: Women's Day - 2022: இது ஒரு நாள் முதல்வன் அல்ல; ஒரு நாள் போலீஸ் - கல்லூரி மாணவியின் புதிய அவதாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.