ETV Bharat / state

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டிக்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!

author img

By

Published : Jul 27, 2022, 1:45 PM IST

Updated : Jul 27, 2022, 2:22 PM IST

அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!
அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணை வெளியீடு - இனி காலை மெனு இதுதான்!

சென்னை: கடந்த மே 7 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110 ன் கீழ், “அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். இதன் முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ‘இத்திட்டத்தின் முதற்கட்டமாக 2022 2023 ஆம் கல்வியாண்டில் காலை உணவு திட்டம் மாநகராட்சி, நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் மலைவாழ் கிராமங்களில் உள்ள 1,545 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு ரூ.33.56 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு விகிதம்: காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு 50 கிராம் அரிசி அல்லது ரவை அல்லது உள்ளூரில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்ககூடிய காய்கறிகள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

காலை மெனு:

  1. திங்கள் - ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், கோதுமைரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்
  2. செவ்வாய் - ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமைரவா காய்கறி கிச்சடி
  3. புதன் - ரவா பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார், வெண்பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார்
  4. வியாழன் - சேமியா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், அரிசி உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், ரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார், கோதுமைரவா உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்
  5. வெள்ளி - செவ்வாய் கிழமை உணவு வகை

மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை ஊரக வளர்ச்சி, நகர்ப்புற நிர்வாகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், உணவுப் பாதுகாப்பு ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: குளம் போல் காட்சியளிக்கும் தொடக்கப்பள்ளி - மாணவர்கள் கடும் அவதி !!

Last Updated : Jul 27, 2022, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.