ETV Bharat / state

'தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்' - ராமதாஸ்

author img

By

Published : Jul 10, 2021, 4:06 PM IST

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம், விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல் துறையும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்

இது தொடர்பாக அவர் இன்று (ஜூலை.10) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து போதை ஊசியை உடலில் செலுத்திக் கொள்ளும் காணொலி காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்தக் காட்சியைக் கண்ட அனைவரும் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்காலம் என்ன ஆகும்? என்ற கவலைக்கும், அதிர்ச்சிக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. கோவை உக்கடம் பகுதி அண்மைக்காலமாகவே போதைக்கு அடிமையானவர்களின் புகலிடமாக மாறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அண்மையில் சமூக ஊடகங்களில் பரவிய காணொலியில் வலி நிவாரணியாக பயன்படுத்தும் மாத்திரைகளை பொடியாக்கி, அதை காய்ச்சி வடிகட்டப்பட்ட நீரில் கலந்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்கின்றனர். அவர்களில் சிறுவர்களும் இருப்பதாக தெரிகிறது.

போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகிறது

கோவையில் மட்டும் தான் இத்தகைய நிகழ்வுகள் நடக்கின்றன என்றோ, மாத்திரைகளை பொடியாக்கி மட்டுமே போதை மருந்தாக பயன்படுத்துகின்றனர் என்றோ கூறி விட முடியாது. அந்த அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் போதைப் பழக்கம் தலைவிரித்தாடுகிறது. என்னென்ன போதை மருந்துகள் கிடைக்கின்றனவோ அவை அனைத்தையும் இளைஞர்களில் ஒரு பிரிவினர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தானதாகும். இது உடனடியாக தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பான்மையினரை காப்பாற்ற முடியாத நிலைமை விரைவில் உருவாகி விடும்.

கோவையை விட பல மடங்கு

கோவையை விட பல மடங்கு அதிகமாக போதை மருந்துகள் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ளன. கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என அனைத்து வகையான போதைப் பொருட்களும் சென்னையில் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல

தமிழ்நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல
தமிழ்நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல

அத்தியாவசியப் பொருட்களான அரிசியும், பருப்பும் வாங்குவதற்கு கூட சில இடங்களில் அரை கிலோ மீட்டர் முதல் ஒரு கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், போதைப் பொருட்கள் மிக மிக அருகிலேயே கிடைக்கின்றன. சில விடுதிகளுக்கும், அறைகளுக்கும் தொலைபேசியில் ஆர்டர் வாங்கி நேரடியாக கொண்டு சென்று கொடுக்கும் அளவுக்கு போதைபொருட்களை விற்பனை செய்யும் முகவர்களின் தொடர்பு வளையம் விரிவடைந்திருக்கிறது. இது தமிழ்நாட்டின் நலன்களுக்கு நல்லதல்ல.

தலைவிரித்தாடும் போதை

இதில் கவலையளிக்கும் உண்மை என்னவெனில் மீள முடியா போதை வழக்கத்திற்கு அடிமையாவோரில் பெரும்பான்மையினர் மாணவர்கள் தான். படிப்புக்காக வீடுகளை விட்டு வந்து விடுதிகளிலும், தனியாக அறை எடுத்தும் தங்கியுள்ள இளைஞர்கள் மிகவும் எளிதாக போதைப்பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். வெளி மாநில மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் அதிக எண்ணிக்கையிலும் பயின்று வரும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், தனியார் கல்லூரிகளும் தான் போதைப்பொருட்கள் தடையின்றி பயன்படுத்தப்படும் பகுதிகளாக திகழ்கின்றன.

40 ஆண்டுகளாக போராடி வருகிறேன்

40 ஆண்டுகளாக போராடி வருகிறேன்

இந்த உண்மை அனைத்து கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றாலும், இதையெல்லாம் தட்டிக்கேட்டால் மாணவர் சேர்க்கை குறைந்து விடுமோ? என்ற அச்சத்தில் போதைத் தீமையை கண்டும் காணாமல் இருந்து விடுகின்றன. மது, புகையிலையின் தீமைகளுக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருவதைப் போலவே போதைப்பழக்கத்திற்கு எதிராகவும் போராடி வருகிறேன். சென்னையிலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் போதைப்பொருட்களின் விற்பனை குறித்து ஆதாரங்களுடன் புகார் கூறி நடவடிக்கை எடுக்க வைத்திருக்கிறேன்.

பள்ளிக்கூடத்திற்கு அருகில் கஞ்சா

சென்னையில் மதுவும், போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை பொதுக்கூட்டத்திலேயே ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறோம். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் பெயர்பெற்ற பள்ளிக்கூடத்திற்கு அருகில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு விற்கப்படும் போதைப் பொருட்களை வாங்கி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு சென்று காட்டி நடவடிக்கை மேற்கொள்ளச் செய்தோம்.

சென்னையில் போதைப்பொருள்

சென்னையில் இன்று காலை ரூ. 1 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருட்களை காவல்துறை பறிமுதல் செய்திருக்கிறது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனை இன்னும் குறையவில்லை; அதிகரித்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.

போதைப் பழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் உடல்நலம் சார்ந்த கோணத்தில் மட்டும் பார்க்கக்கூடாது. போதை உச்சத்திற்கு செல்வதால் இழைக்கப்படும் வன்கொடுமைகள், பாலியல் குற்றங்கள், கொலைகள் போன்றவை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை

இவை ஒருபுறம் இருக்க போதைக்கு அடிமையானவர்களால், அதை அனுபவிக்காமல் இருக்க முடியாது என்பதால், எப்படியாவது போதைப் பொருட்களை வாங்கி விட வேண்டும் என்பதற்காக இளைஞர்களும், பல நேரங்களில் சிறுவர்களும் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். போதைக்காக நடைபெறும் மோதல்கள் பல நேரங்களில் கொலைகளில் முடிகின்றன. அந்த வகையில் போதை மருந்து பழக்கம் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாகவும் மாறி வருவதை அரசு உணர வேண்டும்.

தமிழ்நாட்டின் எதிர்காலம்

இளைஞர்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்காலம்... அவர்கள் தான் விலைமதிப்பற்ற சொத்துகள். அவர்களை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசுக்கு உண்டு. அதை உணர்ந்து தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனையை முற்றிலுமாக கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக மாவட்ட அளவில் தனித்தனி படைகள் அமைக்கப்பட்டு, எங்கெல்லாம் போதைப்பொருட்கள் விற்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் அதிரடி சோதனைகள் நடத்தப்பட வேண்டும்; போதைப் பொருட்களை விற்பனை செய்வோரை கைது கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு முழு விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.