ETV Bharat / state

விலங்குகள் நல அமைப்புகளுக்கு ரூ. 88 லட்சத்துக்கான காசோலை வழங்கிய முதலமைச்சர்

author img

By

Published : Jan 16, 2023, 12:11 PM IST

பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக ரூ. 88,05,000-த்திற்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

Etv Bharatஅரசு சாரா விலங்கு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கம்
Etv Bharatஅரசு சாரா விலங்கு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கம்

விலங்குகள் நல அமைப்புகளுக்கு ரூ. 88 லட்சத்துக்கான காசோலை வழங்கிய முதலமைச்சர்

சென்னை: ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் காயமடைந்து தெருவில் சுற்றித் திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜன.16) தொடங்கி வைத்தார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வள்ளலாரின் 200ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ என்னும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.1.2023) தொடங்கி வைத்தார். பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

கைவிடப்பட்ட உயிரினங்களுக்கு பாதுகாப்பு: கால்நடைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு அவற்றின் உரிமையாளர்களை சார்ந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட விலங்குகள் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தங்குமிடம் தேடி அலையும் போது, உடலில் காயங்கள் மற்றும் பாதுகாப்பற்ற/கெட்டுப்போன உணவை உட்கொள்ளும்போது தொற்றுநோய்கள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு உட்படுகின்றன.

அரசு சாரா விலங்கு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கம்
அரசு சாரா விலங்கு தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி - முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கம்

இத்தகைய கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பல்லுயிர் ஓம்பிய வள்ளலார் அவர்களின் 200வது பிறந்த ஆண்டை முன்னிட்டு, ஆதரவற்ற கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளைப் பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவியளிப்பதற்கு “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்” என்னும் புதிய திட்டம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் கைவிடப்பட்ட விலங்குகளை காக்கும் வகையில் “வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்“ எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் பிராணிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தல், காயமடைந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் (SPCA), விலங்குகள் நல அமைப்புகள் (AWOs) பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு (NGOs) மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) கொள்முதல் செய்வதற்கு நிதியுதவி அளித்தல், ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட, காயமடைந்து தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளித்தல், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ வசதி வழங்கிடவும், உறைவிடம் மற்றும் அவசர ஊர்தி சேவைக்காகவும், நீலகிரி - India Project for Animal Fund Nature, சென்னை – Animal Care Trust, சென்னை – Madras Animal Rescue Society, சென்னை – Prithvi Animal Welfare Society மற்றும் சென்னை – பைரவா பவுண்டேஷன் ஆகிய தொண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் 2 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல் தவணையாக 88 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருங்காட்சியகமாக மாறியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.