ETV Bharat / state

‘10,000 அடி உயரத்துக்கு கூட பேனா வைத்துக் கொள்ளட்டும்’ -  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Feb 11, 2023, 3:42 PM IST

திமுகவின் கட்சி அலுவலகத்தில் பத்தாயிரம் அடி உயரத்துக்கு கூட பேனா வைத்துக் கொள்ளட்டும், கடலில் பேனா வைப்பதற்கு அனுமதிக்கவே முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சிந்தனை சிற்பி சிங்கார வேலரின் 76ஆவது நினைவு தினத்தை ஒட்டி சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவகத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலாளருமான டி. ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "இந்தியாவில், பொதுவுடமை தத்துவத்தைக் கொண்டுவந்து, மே தினம் வர காரணமான பெருமை சிந்தனை சிற்பி சிங்கார வேலருக்கு மட்டுமே உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக மக்கள் ஆதரவை இழந்துள்ள திமுக அரசு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை கவர வேண்டும் என்பதற்காக இரவோடு இரவாக சாலை போடுவது, வரி விகிதங்களை குறைப்பது போன்ற தேர்தல் நடத்தை விதிகளை மீறி திமுக அரசு செயல்படுவதற்கான ஆதாரங்கள் உள்ளன.

தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றாமல் தற்போது 85 விழுக்காடு தேர்தல் அறிவிப்புகளை நிறைவேற்றி விட்டதாக, பொய்யான தகவல்களை மக்களிடத்தில் கூறி வந்தாலும், அவற்றை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையும்.

அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும். கருணாநிதியின் நினைவாக வங்கக்கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது, ஒட்டுமொத்த மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் செயல். கடல் வளத்துக்கு எதிரான செயல். திமுகவின் கட்சி அலுவலகத்தில் பத்தாயிரம் அடி உயரத்துக்கு கூட பேனா வைத்துக் கொள்ளட்டும். ஆனால், மீன்வளம் பெருகக்கூடிய முகத்துவார பகுதியில் பேனா வைப்பதற்கு அனுமதிக்கவே முடியாது.

ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை அளிப்போம் என திமுக அரசு வாக்குறுதி அளித்துள்ளது. அரசு துறைக்கு பணியாளர்கள் தேர்வு செய்தால் அது அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படும் என்று சொல்லிவிட்டு, தற்போது திமுகவினருக்கு வேலை வழங்குகின்றனர். சமூக நீதியை மீறி தற்போது போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை திமுக அரசு பணிக்கு எடுக்க இருக்கிறது" என கூறினார்.

இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக 200 நாளாக போராட்டம்.. விவசாயிகளை சந்திக்க சென்ற வெற்றிச்செல்வன் கைது.. அரசியல் தலைவர்கள் கண்டனம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.