ETV Bharat / state

சென்னையில் முதல்முறையாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி

author img

By

Published : Aug 6, 2021, 8:56 PM IST

Updated : Aug 6, 2021, 9:33 PM IST

சென்னை காவல்துறை
சென்னை காவல்துறை

19:56 August 06

சென்னை காவல்துறையில் முதல்முறையாக காவலர்கள் டிரான்ஸ்பர் கமிட்டி ஒன்றை அமைத்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை: பொதுவாக இரண்டாம் நிலை காவலர் தொடங்கி, உதவி ஆய்வாளர் வரையிலான காவலர்கள் டிரான்ஸ்பர், குறிப்பிட்ட பகுதிக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதற்கான விருப்ப மனுவை சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் இணை ஆணையரிடமும், ஆய்வாளர் முதல் உதவி ஆணையர் வரையிலான காவல் அலுவலர்கள் அந்த மனுவை டிஜிபி அலுவலகத்தில் வழங்குவது வழக்கம்.

லஞ்சம் வாங்கிக் கொண்டு டிரான்ஸ்பர்

இது போன்ற பணியிடமாற்றங்களுக்கு சில காவல் அலுவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியிட மாற்றம் செய்வதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது போன்ற சூழல்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது மட்டுமின்றி பணம் கொடுக்கும் காவலர்களுக்கு மட்டுமே டிரான்ஸ்பர் கிடைக்கும் என்ற நிலையும், நியாயமாக டிரான்ஸ்பர் கேட்ட காவலர்களுக்கு அது கிடைக்காமல் போகும் நிலைமையும் ஏற்பட்டது. 

3 உறுப்பினர்கள் கமிட்டி

இதை தவிர்ப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்றை அமைத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (ஆக.6)உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில்,  "சென்னை காவல் மாவட்டம் மற்றும் மண்டலங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரை பணியிட மாற்றம் செய்வதற்காக அந்த காவல் மாவட்ட இணை ஆணையர் தலைமையில் துணை ஆணையர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் கமிட்டியில் செயல்பட உள்ளனர்.
அதேபோல் மத்தியக் குற்றப்பிரிவு அலுவலக பணியிட மாற்றம் செய்ய, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்கள் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் செயல்படுவார்கள் எனவும் நுண்ணறிவு பிரிவுக்காக சீனியர் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் தலைமையில் துணை ஆணையர்கள் பணியிட மாற்றத்திற்கான பணியைச் செய்து, உத்தரவை கூடுதல் ஆணையர் வெளியிடுவார். 
அதேபோல் கட்டுப்பாட்டு அறையில் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவை கூடுதல் ஆணையர் தலைமையகம், மத்திய குற்றப்பிரிவு ஆகியோர் பணியிட மாறுதலுக்கான உத்தரவை பிறப்பிப்பார்.

போக்குவரத்து காவலர்கள் பணிமாற்றம்

கூடுதல் ஆணையர் தலைமையிடம், உறுப்பினர்கள், துணை ஆணையர் நிர்வாகம், ஆயுதப்படை 1, ஆயுதப்படை இரண்டு துணை ஆணையர்கள், மூன்று உறுப்பினர்கள் ஆயுதப்படை பிரிவில் பணியிட மாறுதல் உத்தரவை கவனிப்பார்கள். அதே போல மண்டல இட மாற்றங்கள் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவலர்களுக்கான பணியிட மாற்ற உத்தரவை நியமிக்கப்பட்ட கூடுதல் ஆணையர் பிறப்பிப்பார்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவலர்கள் கூடுதல் ஆணையர் தலைமையிலான குழு பட்டியல் தயாரித்து தலைமையிட கூடுதல் ஆணையருக்கு அனுப்புவர். கூடுதல் ஆணையர் அதனை வெளியிடுவார். 

காவல் ஆய்வாளர், உதவி ஆணையர், கூடுதல் துணை ஆணையருக்கான பணியிட மாற்ற உத்தரவு பட்டியலை சீனியர் கூடுதல் ஆணையர், உறுப்பினர்கள் கூடுதல் ஆணையர்கள், துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு தயாரித்து காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு வெளியிடப்படும்.

நிபந்தனைகளுடன் பணிமாற்றம்

குறிப்பாக ஒரு வருடம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களுக்கு மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்படும். உடல் நிலை, மருத்துவம் போன்ற காரணங்களுக்கு மட்டுமே காவலர்கள் 1 வருடத்திற்குள்ளாக பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டாம் நிலை காவலர் முதல் உதவி ஆய்வாளர் வரையிலான காவலர்கள் அனுப்பியுள்ள பணியிட மாற்ற விண்ணப்ப மனுக்களை மாதந்தோறும் முதல் புதன்கிழமை நியமிக்கப்பட்ட அலுவலர்கள் மனுக்களை பரிசீலனை செய்வர். அதேபோல் காத்திருப்போர் பட்டியல் காவலர்கள் மற்றும் ஆய்வாளர் முதல் கூடுதல் துணை ஆணையர்கள் வரையிலான பணியிட மாற்ற கமிட்டி மாதந்தோறும் 1 மற்றும் 16 ஆம் தேதி செயல்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்த காவலர்கள் பணியிட மாற்றத்திற்கு விண்ணப்பம் செய்தால் அதை கருத்தில் கொள்ள வேண்டாம், இந்த கமிட்டி நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும்" என்று காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:   தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

Last Updated : Aug 6, 2021, 9:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.