ETV Bharat / state

“குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ஏக்கர் ரூ.35,000 வழங்குக” - ஈபிஎஸ் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 5:01 PM IST

Etv Bharat
Etv Bharat

EPS: குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என திமுக அரசை எடப்பாடி பழனிசாமி அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை: இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படும்.

  • குறுவை பாசனத்தால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாய் வழங்கவும், தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கவும் விடியா திமுக அரசை வலியுறுத்தல்!

    - மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/FASRaKPyrd

    — AIADMK (@AIADMKOfficial) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 100 அடிக்குமேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சர், ஜூன் 12-ஆம் தேதியே மேட்டூரில் இருந்து தண்ணீரைத் திறந்து விட்டார். ஆனால், போதுமான தண்ணீர் கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வராததால், செப்டம்பர் 15-ஆம் தேதி வரை குறுவை சாகுபடி முழுமைக்கும் இந்த விடியா திமுக அரசால் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க முடியவில்லை.

இதனால், சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றார், வள்ளலார். எரியும் நெருப்பை நீர் கொண்டு அணைப்பதற்கு பதில், பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்வதுபோல், ஜூலை மாதமே மேட்டூரில் தண்ணீர் இல்லை என்றவுடன், கர்நாடகத்தில் உள்ள தன் கூட்டாளி காங்கிரஸ் அரசுடன் பேசி, குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் பெறாதது மட்டுமின்றி, தமிழக விவசாயிகளின் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடும் செயலிலும் ஈடுபட்டுள்ளார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின்.

மேலும், மக்களை வஞ்சிப்பதையே தொழிலாகக் கொண்ட திமுக, ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை பயிர்களுக்கு காப்பீடு செய்ய நிதி வழங்காத அவலமும் நிலவுகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மூன்று முறை விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி மற்றும் புயல் வெள்ளத்தின்போது பாதிப்படைந்த விவசாயிகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு மற்றும் அரசு நிவாரணம் என்றும், வறட்சிக் காலங்களில் குறுவை தொகுப்பு மற்றும் சம்பா தொகுப்பு வழங்கப்பட்டு, வேளாண் பெருமக்கள் அவர்களது நிலங்களில் பயிர் செய்வதற்கு வேண்டிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது அதிமுக அரசு.

எனது தலைமையிலான அதிமுக அரசு, வறட்சிக் காலமான 2017-2018ஆம் ஆண்டில், சுமார் 15.18 லட்சம் விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 31.71 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு காப்பீடு செய்யப்பட்டு, பிரீமியம் தொகைக்காக 651 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது.

மேலும், வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டுத் தொகை மற்றும் அரசு நிவாரணம் ஆகியவை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் உடனுக்குடன் செலுத்தப்பட்டு, விவசாயிகளின் உண்மையான தோழனாக அதிமுக அரசு திகழ்ந்தது.

அதே வேளையில், விடியா திமுக அரசோ, தமிழகத்திற்கு குறுவைப் பருவத்தில் காப்பீடு தேவையில்லை என்று கடந்த ஜூன் மாதம் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதை மத்திய அரசே, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றின்போது பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்துள்ளது.

விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசின் இந்தப் போக்கை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு சாதனை படைத்துவிட்டோம் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த விடியா திமுக அரசு, கடந்த இரண்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாமல் விவசாயிகளுக்கு பெரும் துரோகத்தை இழைத்துள்ளது என்றும், உடனடியாக பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி நிலங்களை அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து உரிய இழப்பீட்டை விவசாயிகளுக்கு வழங்க கடந்த ஆகஸ்ட் 26 அன்று வெளியிட்ட அறிக்கை மூலம் நான் விடியா திமுக அரசை வலியுறுத்தினேன். ஆனால், இதுவரை இந்த விடியா திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், நேற்றைய முன்தினம் (செப் 21) அன்று வேளாண்மைத் துறை அமைச்சர், 2022-2023ஆம் ஆண்டு சம்பா சாகுபடிக்காக 4 தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் சுமார் 2,319 கோடி ரூபாயை காப்பீட்டுத் தொகையாக செலுத்தி உள்ளதாகவும், கடந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்து பாதிப்படைந்த சுமார் 6 லட்சம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வெறும் 560 கோடி ரூபாயை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பா சாகுபடி மேற்கொண்டு ஓராண்டுக்குப் பிறகு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற்ற இழப்பீட்டினை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, 2021-2022ஆம் ஆண்டு சம்பா சாகுபடியால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு வெறும் 100 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை மட்டுமே காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத் தந்ததாகவும், பல விவசாயிகளுக்கு இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படவில்லை என்றும், எனவே, 2022-2023ஆம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழுமையான நிவாரணத்தை பெற்றுத் தருமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில், சுமார் 2,319 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகை செலுத்தியுள்ள விடியா திமுக அரசு, வெறும் 560 கோடி ரூபாயை மட்டும் இழப்பீடாகப் பெற்றுள்ளது. எனவே, 2022-2023ம் ஆண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு, பாதிப்படைந்த வேளாண் நிலங்களை மீண்டும் ஒரு முறை முழுமையாக கணக்கீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் முழுமையான இழப்பீட்டுத் (நிவாரணம்) தொகையினை பெற்றுத் தருமாறு வலியுறுத்துகிறேன்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்த விபரங்களை முழுமையாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகையாக ஏக்கர் ஒன்றிற்கு 35,000 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழகம் முழுவதும் தென்மேற்குப் பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டுமென்று விவசாயிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், விவசாயிகளின் நலனுக்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சம்பா மகசூல் பாதிப்புக்கு ரூ.560 கோடி இழப்பீடு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.