ETV Bharat / state

'தமிழ்நாடு' என்றால் புலம்புவோருக்கு விளம்பரம் போதும் - முதலமைச்சர் தாக்கு

author img

By

Published : Jan 14, 2023, 7:01 PM IST

Updated : Jan 14, 2023, 7:10 PM IST

'தமிழ்நாடு' என்று சொல்லக்கூடாது என புலம்பிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: 'திராவிட மாடல் பயிற்சிப் பாசறை - 2' (Dravidian Model Training Workshop) மற்றும் 'திமுக இளைஞர் அணி செயலி தொடக்க விழா' (DMK Youth Team App Inauguration) சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜன.14) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அமைச்சர் சேகர் பாபு, இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இளைஞர் அணியைச் சார்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், 'தமிழ்நாட்டினுடைய, இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் வணக்கம்' என்று குறிப்பிட்டார்.

இளைஞர் அணி நிகழ்ச்சிக்கு ஏன் அழைக்கவில்லை? மேலும் பேசிய அவர், 'நான் இப்போது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். பிறந்த வீட்டிற்கு மட்டும் அல்ல; வளர்ந்த வீட்டிற்கும் வந்திருக்கிறேன்.அதுவும் வளர்ந்து கொண்டிருக்கும் வீட்டிற்கு வந்திருக்கிறேன், உதயநிதியின் தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். மூன்றரை வருடங்கள் இளைஞரணி நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட நிலையில் அதற்குப் பதில் அளித்த முதலமைச்சர், ’மூன்றரை வருடங்கள், இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினார்.

’ஆட்சி பொறுப்பில் இருக்கும் காரணத்தால் பல்வேறு பணிகள் இருக்கும் என்ற காரணத்தால் அதனை தவிர்த்து இருப்பார் என நான் புரிந்துகொண்டேன். ஆனால் இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன். மேலும், திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது. இதை இங்கு சொல்வதால் மற்ற அணிகள் கோபப்பட மாட்டார்கள்.

விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கு வெற்றியைத் தேடி தந்தார் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் கட்சிக்கு எழுச்சியைத் தேடி தந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒரு செங்கல் பிரசாரம் எந்த அளவுக்கு பயன்பட்டது. மக்கள் மனதில் எப்படி பதிந்தது என்பதை அதிகம் நான் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை’ என்றார்.

இளைஞரணியால் மகிழ்ச்சி: ’மேலும், அரசாங்கம் செய்ய வேண்டிய நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கு இளைஞர் அணி மூலம் அறிக்கை வெளியிடு, நீர் நிலைகளை சுத்தம் செய்யுங்கள்’ என்று உத்தரவிட்டவர் உதயநிதி ஸ்டாலின். இந்தி திணிப்பு (Hindi Imposition) சூழல் வரும்போதும், நீட் தேர்வு (NEET Exam) பிரச்னையில் இளைஞர் அணியும் பங்கேற்றது என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் செல்ல முடியுமா? கடல் அலையில் கால்களை நனைக்க முடியுமா? என்ற ஏக்கம் கேள்விக் குறியாகவே இருந்தது.

எல்லா தொகுதியிலும் 'திராவிட மாடல்' பாசறை: ஆனால், கடற்கரையில் மரப்பலகை அமைத்து எல்லோரையும் போன்று மாற்றுத்திறனாளிகளும் தங்கள் கால்களை நனைக்கலாம் என்று எங்கும் இல்லாத சாதனையை படைத்தவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கெல்லாம் மகுடம் வைத்ததைப் போன்று இருப்பது அவர் செய்துகாட்டிய 234 தொகுதியிலும் 'திராவிட மாடல்' பாசறை கூட்டம். பேசி பேசி வளர்ந்த கட்சி திமுக, இப்போது நவீன காலமாக மாறுவதால் இந்த முறை மாறி வருகிறது. கலைஞர் போகாத ஊரே இருக்காது.

கலைஞர் கால்படாத கிராமமே இருக்காது. திமுக 1947ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1967ஆம் அண்டுதான் திமுக முதல் முதலில் அண்ணா (C.N.Annadurai) தலைமையில் ஆட்சிக்கு வந்தது. திமுக தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்துவிடும் என்று கூறவில்லை. ஆனால், இப்போது தொடங்கும் கட்சி எல்லாம் ஆட்சிக்கு வந்துவிடும் என்று சொல்லிதான் கட்சியே தொடங்குகிறது.

திமுக அப்படி இல்லை; திராவிட மாடல், திராவிட மாடல் என்று இன்று முழங்கிக்கொண்டு இருக்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படி இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததுக்குப் பிறகு எப்படி இருக்கிறது. அதற்காக பாடுபட்ட குரல் கொடுத்த திமுக தலைவர்கள், அந்த வரலாறுகளை எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

'தமிழ்நாடு'-அண்ணாவிற்கு புகழாரம்: உங்களுக்குப் பிறகு இருக்கும் இளைஞர்களுக்கும் அதை நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும் அதற்காக தான் இப்படிப்பட்ட பயிற்சி பாசறை நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டிற்கு 'தமிழ்நாடு' என்று பெயர் கிடைக்கும்போது, அந்தப் பெயர் சூட்டப்படும் விழாவில் உடல் நிலை சரியில்லாத போதும் விழாவில் கலந்துகொள்ளாமல் இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று சொன்னவர், அண்ணா. இன்றைக்கு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என ஒருத்தர் புலம்பிக் கொண்டிருக்கிறாரே? அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம்’.

இப்படிப்பட்ட வரலாற்றை பெற்றிருக்கக்கூடிய இயக்கம் தான் நம்முடைய 'திராவிட முன்னேற்றக் கழகம்' இந்த வரலாற்றைப் பேணி காக்க வேண்டிய பொறுப்பு உதயநிதிக்கு உள்ளது. உங்களை நம்பி, இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடமையை நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டும். வாழ்க தமிழ்நாடு..வாழ்க தமிழ்நாடு' என்றார்.

முன்னதாக மேடையில் உரையாற்றிய திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 'இளைஞரணி செயலாளராக நான் பதவியேற்று மூன்றரை வருடங்கள் ஆகிறது. மூன்றரை ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் முதல் திமுக இளைஞர் அணி நிகழ்ச்சி இது. எடுத்ததை செய்து முடிக்கும் வரை யாரையும் தூங்க விடமாட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திராவிட பாசறை நிகழ்ச்சியை எந்தெந்த தொகுதியில் நடத்த உள்ளீர்கள். யார் யார் பேசுகிறார்கள்; எப்போது தொடங்க போகிறீர்கள் என்று இளைஞர் அணி நிகழ்ச்சியின் மீது அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்’ என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவில் புதியதாக 22 லட்சம் இளைஞர்கள்: தொடர்ந்து பேசிய அவர், ’இளைஞர் அணியின் திராவிட மாடல் பாசறை நிகழ்ச்சியை, என்னை விட அதிகம் கவனம் செலுத்தியவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அடுத்தபடியாக ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் திமுக இளைஞர் அணி சார்பில் திராவிட மாடல் பாசறை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த நிகழ்ச்சி அமைய வேண்டும். 22 லட்சம் உறுப்பினர்களை திமுக இளைஞரணிக்குப் புதிதாக சேர்த்துள்ளோம்.

இல்லம் தோறும் இளைஞரணி; கட்டளைக்கு காத்திருக்கிறோம்: 'இல்லம் தேடி கல்வி', 'மக்களை தேடி மருத்துவம்' என்ற அரசு திட்டம் போன்று 'இல்லம் தோறும் இளைஞரணி' என்ற கழக திட்டத்தின் மூலம் மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடிகிறது. இதன் மூலம், மக்களுக்கு நம்மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. மேலும், நாம் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அந்தப் பணிகளை உற்சாகமாக செய்ய வேண்டும். திமுக தலைவர் கட்டளையிட்டால், அதனை செய்து முடிக்க இளைஞரணி தயாராக இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுக ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது": அண்ணாமலை

Last Updated : Jan 14, 2023, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.