சென்னையில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை மற்றும் ஐடி ரெய்டு... காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 19, 2024, 12:34 PM IST

ED and IT raid in Chennai

ED and IT Raid in Chennai: சென்னையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் சிஇஓ வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்ட ஓஷன் லைஃப்ஸ்பேஸ் (Ocean Lifespaces) என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் மட்டும் சுமார் ரூ.1,000 கோடி வருவாய் ஈட்டுவோம் என அந்த நிறுவனத்தின் சிஇஓ எஸ்கே பீட்டர் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, இந்த கட்டுமான நிறுவனத்தின் மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஜன.19) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான நிறுவனத்தின் சிஇஓ எஸ்கே பீட்டர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது 6-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கிண்டியில் உள்ள கட்டுமான அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையின் முடிவில் முழுமையான விவரங்கள் வெளியாகும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல சென்னை யானை கவுனி, கீழ்பாக்கம், கே.கே நகர் உள்பட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளும் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை யானை கவுனி பகுதியைச் சேர்ந்த கவர்லால் பஜ்ஜிலால் என்பவர்களுக்கு சொந்தமான கெமிக்கல் கம்பெனி தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஏற்கனவே கவர்லாலுக்கு சொந்தமான கெமிக்கல் நிறுவனம் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தைப்பூசத் திருவிழா: பழனியில் கோயிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.