ETV Bharat / state

கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு-அமைச்சர்

author img

By

Published : Nov 2, 2022, 1:32 PM IST

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு-அமைச்சர்
கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கிணறுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு-அமைச்சர்

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்தாண்டு கால தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தரிசுநிலங்களை கண்டறிந்து, பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிக்குக் கொண்டு வருவதுடன், பல்வேறு உழவர் நலன் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து கிராமங்களிலும், படிப்படியாக ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும், அதன் மூலம் தன்னிறைவையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமங்கள் தேர்வு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டப்பணிகளையும் ஒருங்கே செயல்படுத்தும் வகையில், 2021-22 ஆம் ஆண்டில் 1,997 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய ஆழ்துளைக் கிணறு: தரிசு நிலத் தொகுப்பில் சாகுபடி மேற்கொள்வதற்கு, தரிசு நிலத் தொகுப்பிலோ அல்லது அருகில் உள்ள புறம்போக்கு நிலத்திலோ நிலத்தடிநீர் ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறு அமைக்கப்படுகிறது.

இதுவரை, 980 தரிசுநிலத் தொகுப்புகளில், 453 இடங்களில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஊரக வளர்ச்சித்துறை மூலம் திறந்த வெளிக் கிணறுகள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தட்கல் முறையில் மின் இணைப்பு: இத்திட்டத்தில் உருவாக்கப்படும் ஆழ்துளை அல்லது குழாய் அல்லது திறந்த வெளிக் கிணறுகளில் தட்கல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 2,000 மின் இணைப்பு வழங்கப்படும். இத்தகைய மின் இணைப்பு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநர் பதவியின் பெயரில் மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு தட்கல் முறையில் வழங்கப்படும் மின்இணைப்புகளுக்கு ஆகும் மொத்த செலவினையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.
மின்நுகர்வுக்கான கட்டணமும் அரசே ஏற்பு தட்கல் முறையில் வழங்கப்படும் இம்மின்இணைப்புகளில் மின் அளவீட்டுக்கருவி பொறுத்தப்பட்டு, அதற்கான மின்நுகர்வுக் கட்டணத் தொகையையும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண்மைத் திட்டத்தின் கீழ், அரசே செலுத்தும்.

இரண்டாம் கட்ட திட்ட செயல்பாடு: 2022-23 ஆம் ஆண்டில் இத்திட்டத்தினை செயல்படுத்திட 3,204 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டு, தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.

முன்பதிவு முகவரி: இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பெயரை உழவன் செயலி அல்லது www.tnagrisnet.tn.gov.in அல்லது www.tnhorticulture.tn.gov.in அல்லது www.mis.aed.tn.gov.in இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து, கொள்ளலாம்.

பாசன வசதியின்றி தரிசாக உள்ள நிலங்களில் பாசன வசதியினை உருவாக்கி, தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருவதற்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு" அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:சுமார் 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கி உள்ளது - அமைச்சர் நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.