ETV Bharat / state

ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றிணைக்கவே ஆதார் எண்? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

author img

By

Published : Mar 8, 2023, 11:53 AM IST

ஒரே வீட்டில், ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் ஒன்றிணைக்கவே ஆதார் எண் பெறப்படுகிறது என்பது முற்றிலும் தவறானது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி
விளக்கமளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: தமிழகம் முழுவதும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், விவசாய பயன்பாடு என அனைத்திற்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு மானிய விலையிலும், விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாகவும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் படி தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. பலரும் இணைக்காத நிலையில் மீண்டும் மீண்டும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது. பலமுறை கால அவகாசம் வழங்கப்பட்ட பின் தற்போது பெருவாரியான நபர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இந்நிலையில், ஒரே வீட்டில் அல்லது குடியிருப்பில் ஒரே நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றிணைத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பதியப்பட்ட கடிதம் பரவி வந்தது. சமூக வலையதளத்தில் பதியப்பட்ட கடிதத்தில், "தங்களது வளாகத்தில் ஒன்றுக்குமேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வளாகத்திற்கு ஒரு மின்னிணைப்பு என்ற அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே மின்னிணைப்பாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, தங்களது மின் இணைப்புகளை ஒரே மின் இணைப்பாக மாற்றிகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இதற்கு பதிலளித்துள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் இதுவரை 99 விழுக்காட்டிற்கும் மேல் வீடு, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் சமூக வலைதளங்களில், ஒரே வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகள் இணைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து பதியப்பட்டு பரவி வருகிறது. இந்த கருத்து முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது ஆகும்.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்.9ஆம் தேதி வெளியிடப்பட்ட வீதப்பட்டியல் மாற்ற ஆணையின் சரத்துக்களின்படி, கள ஆய்வின் அடிப்படையில் ஒரே வீட்டில் அல்லது குடியிருப்பில், ஒரே நபரின் பெயரில், ஒரு குடும்பத்தினரே உபயோகிக்கும் ஒன்றிற்கும் மேற்பட்ட வீட்டு மின்னிணைப்புகளை ஒன்றிணைக்க அல்லது அத்தகைய கூடுதல் மின்னிணைப்புகளைப் பொதுப்பயன்பாட்டிற்கான மின்னிணைப்பாக மாற்ற உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும், சில நிர்வாக காரணங்களால் மேற்படி ஒன்றிணைப்பு அல்லது வீதப்பட்டியல் மாற்றும் பணி (Tariff conversion) கால அவகாசம் தொடங்க கூடுதல் கோரப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பான எந்த ஒரு செயல் உத்தரவும் மின்பகிர்மான வட்டங்களிலுள்ள பிரிவு அலுவலகங்களுக்கு பிறப்பிக்கப்படவில்லை. எனினும் இக்குறிப்பிட்ட, களஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பிரிவு அலுவலரின் கடித வரைவு செயல், ஒரு தனிப்பட்ட நிகழ்வு ஆகும். இதில் சம்பந்தப்பட்ட அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மதுரை வழியே இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.