ETV Bharat / state

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க கல்வியாளர்கள் கோரிக்கை

author img

By

Published : Aug 19, 2022, 7:20 PM IST

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க கல்வியாளர்கள் பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை
பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவி இறந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை முடியும் வரை சிறப்பு அலுவலரை நியமனம் செய்து அப்பள்ளியை அரசு நிர்வகிக்க வேண்டுமெனவும், பள்ளிக் கல்வித்துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புவதாக கல்வியாளர்கள் கூறியுள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழியை முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, அ. மார்க்ஸ், ப. சிவக்குமார், பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் சந்தித்து, கல்வியாளர்கள் சார்பாக கள்ளக்குறிச்சி பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை கொடுத்துள்ளனர்.

அந்த கோரிக்க மனுவில் உள்ளதாவது, ’குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக பலவிதமான செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள கல்வியாளர்களும், கல்விச்செயல்பாட்டாளர்களும் மாநிலத்தில் பல்வேறு பள்ளிகளில் படித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளின் தொடர்ச்சியான அதிர்ச்சி மரணங்களைக்கண்டு மிகவும் மன வேதனையடைந்துள்ளோம். எனவே, அரசு நடவடிக்கை எடுக்க ஆலோசனைகளை வழங்குகிறோம்.

பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து குழந்தைகளின் நலனை உறுதிசெய்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, பள்ளிக்கல்வித்துறைக்கும் சமூக நலத்துறைக்கும் அதி முக்கியமான பொறுப்பு இருக்கிறது. இந்த இரண்டு துறைகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு இல்லையென்பதை உணர்கிறோம். அதனால்தான் குழந்தைகளின் குறைந்தபட்ச கண்ணியத்துடன் கல்வியறிவு மற்றும் எண்ணறிவுத் திறனை அடைவதை உறுதிப்படுத்தவதில் பள்ளியின் ஒட்டுமொத்த செயல்பாடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

கல்வியைச்சந்தையின் நுகர்வுப்பொருளாக மதிப்பிடும் போக்கானது குழந்தைகளுக்குப் பலவிதமான தீங்குகளை உருவாக்குகிறது. சம்பந்தப்பட்ட குழந்தை உரிமை முகமையின் எந்த விதமான கண்காணிப்பும் இல்லாத காரணத்தால், தனியார் கல்வி நிறுவனங்கள் சுயநல நோக்கில் முழுச்சுதந்திரத்தையும் அனுபவிக்கின்றன. இந்தப்போக்கின் விளைவாகப் பல கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் அதிர்ச்சி மரணங்கள் நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் நிகழ்கின்ற பாலியல் துன்புறுத்தல், பள்ளி நிர்வாகத்திற்குப்பொறுப்பாக்கப்படாமல், தனி நபர்களின் விவகாரமாகவே நடத்தப்படுகிறது. நிர்வாகத்தோடு தொடர்புடைய நபர்களால் நிறுவனத்தில் குழந்தையின்மீது செய்யப்படும் எந்த விதமான குற்றமும் நிறுவனக்குற்றமாகும். பள்ளிக்குழந்தைகளுக்குப் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் உறுதிப்படுத்திட, பள்ளிகளைக் கண்காணிப்பதற்கும், ஒழங்குபடுத்துவதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் 2022 ஜூலை 13ஆம் தேதி நிகழ்ந்த பெண் குழந்தையின் மரணம், பள்ளிக் கல்வித்துறையாலும், காவல்துறையாலும் எவ்விதமான சமூகப் பொறுப்புணர்வுமின்றி, மிகச் சாதாரணமான முறையில் கையாளப்படுகிறது. தேசியக் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு ஆணையம் நேரில் சென்று விசாரித்ததைத்தொடர்ந்து மாநிலக் குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் நேரில் சென்று விசாரித்ததைத் தவிர, சமூகநலத்துறையின்கீழ் இருக்கின்ற எந்த முகமையும் பிரச்னைக்குரிய பள்ளிக்குச்சென்று விசாரணை நடத்தவில்லை.

பள்ளி நிர்வாகம் நடைபெற்ற நிகழ்வுகள்பற்றி கூறியதைக் கூர்மையாக ஆய்வு செய்யும்போது, அந்தப் பள்ளிக் குழந்தையின் உயிரிழப்பில் பலத்த சந்தேகம் எழுகிறது. குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கட்டடத்தின் மேல்தளத்திலிருந்து மாணவி விழுந்தார் என கொடுக்கப்பட்ட விளக்கமானது, மரணத்திற்குக் காரணமான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சக்திகளை மூடி மறைத்து, அவர்களைப் பாதுகாக்க உருவாக்கிய கதையாகத்தான் தெரிகிறது.

வழக்கு விசாரணையில் இருப்பதால், விசாரணை முடியும் வரை சிறப்பு அலுவலரை நியமனம் செய்து அப்பள்ளியை அரசு நிர்வகிக்க வேண்டுமென அரசிடம் வேண்டிக்கொள்கிறோம். பள்ளியை நிர்வகிப்பதற்கு ஒரு சிறப்பு அலுவலரை நியமித்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின் தாமதப்போக்கும், மெத்தனப்போக்கும் விசாரணையைப் பாதிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என அதில் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பைக்குடன் தவறி விழுந்து கொத்தனார் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.