ETV Bharat / state

முதுகலை மருத்துவ படிப்பில் சேர ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண்.. கல்வித்தரம் பாதிக்கும் என கல்வியாளர் கருத்து..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 1:04 PM IST

zero percentile marks for pg NEET: முதுகலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு முதுகலை நீட் நுழைவுத் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண் போதும் என அறிவித்துள்ளது நீட் நுழைவுத் தேர்வு தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கல்வியாளர் நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

zero percent marks for pg medical courses
முதுகலை மருத்துவ படிப்பில் சேர ஜீரோ பர்சன்டேஜ் மதிப்பெண் கல்வித் தரம் பாதிக்கும் என கல்வியாளர் கருத்து

முதுகலை மருத்துவ படிப்பில் சேர ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண்

சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் இளநிலை தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.

அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். இந்த நிலையில், முதுகலை மருத்துவ படிப்புகளான எம்ட., எம்எஸ்., டிப்ளமோ உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் 2023-24 கல்வி ஆண்டில் சேருவதற்கு முதுகலை நீட் நுழைவுத் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் (தகுதி மதிப்பெண்) பெற்று இருந்தால் போதும் என தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே 2 சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் 3-வது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்ளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் அதாவது கடைசி தரநிலை எடுத்தாலும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்போது, "நீட் தேர்வு அறிமுகம் செய்யும்போது மாணவர்களின் கல்வி தரத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என அறிவித்தனர். ஆனால், தற்பொழுது முதுகலை மருத்துவ படிப்பில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேர்வதற்கு முன் வராததால் ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண் பெற்றிருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவித்துள்ளனர்.

நீட் தேர்வில் ஜீரோ பர்சன்டைல் மதிப்பெண் பெறுபவர்கள் முதுகலை படிப்பில் இடங்களை தேர்வு செய்தால் அவர்களிடம் எப்படி தரமான மருத்துவ சேவையை எதிர்பார்க்க முடியும். எனவே அரசு உடனடியாக இதனை ரத்து செய்ய வேண்டும். மருத்துவத்துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில் சீட்டை விற்பதற்காக எதிர்கால தலைமுறையை வீணடித்து விடக்கூடாது.

தனியார் உயர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அதிக அளவில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கின்றனர். கட்டணங்களை உயர்த்தி மதிப்பெண்களை குறைத்து மாணவர்களை சேர்ப்பதால் அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து நல்ல மருத்துவர்கள் கிடைப்பது சிரமமாக இருக்கும்.

வடமாநிலங்களில் நீட் முதுகலை தேர்வில் காப்பி அடிக்க விடுகின்றனர். ஒரு பக்கம் காப்பி அடித்து விடவும் மறுபக்கம் தரத்திலும் சமரசம் செய்து கொள்ளும் பொழுதும், நீட் தேர்வு எதற்கு? இந்தியாவில் 13,000 முதுகலை இடங்கள் மூன்றாவது சுற்றில் காலியாக உள்ளன.

கல்வியும் மருத்துவத்தையும் தனியார் மயமாகிய எந்த நாடும் வளர்ந்ததாக சரித்திரம் கிடையாது. அரசியல் கட்சியினரும் மருத்துவக் கல்லூரிகளில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு இருப்பதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இளநிலை நீட் தேர்விலும் மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றவர்களுக்கும் பணம் கொடுத்தால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கிறது. நீட் தேர்வில் ஒரு சதவீதம் கூட தகுதியில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனக் கூறினார்கள். தற்பொழுது மதிப்பெண்களை குறைத்து மாணவர்களை சேர்க்கின்றனர்.

நுழைவுத் தேர்வு நடைபெறும் போது டாக்டர் அனந்த கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு நான்காம் ஆண்டுக்கு ஒரு முறையும் மாணவர்கள் சேர்க்கும் முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான மதிப்பெண்களில் சமரசம் செய்து கொள்வதால் பிற்காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களாக மட்டுமே இருப்பார்கள்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராமோஜி பிலிம் சிட்டியில் ஐசிசி உலகக்கோப்பை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.