ETV Bharat / state

திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் அரசுக்கு இழப்பு - ஈபிஎஸ்

author img

By

Published : Apr 15, 2022, 1:44 PM IST

திமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

edappadi-palanisamy-says-purchased-paddy-bundles-soaked-in-rain-and-loss-to-the-stateதிமுக அரசின் நிர்வாக திறமையின்மை.. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு - எடப்பாடி
edappadi-palanisamy-says-purchased-paddy-bundles-soaked-in-rain-and-loss-to-the-state திமுக அரசின் நிர்வாக திறமையின்மை.. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு - எடப்பாடி

சென்னை: இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 11 மாத கால விடியா ஆட்சியில், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுவருகின்றன. ஏற்கெனவே பலமுறை சட்டப்பேரவையிலும், அறிக்கைகள் வாயிலாகவும் இந்த அரசின் கவனத்தை ஈர்த்த பின்பும், முறைகேடுகள் தொடர்கதையாகவே உள்ளன.

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாமை, ஆன்லைனில் பதிவு செய்பவர்களிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற கெடுபிடி, மூட்டைக்கு 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கமிஷன் என்ற பல்வேறு குளறுபடிகள் அரங்கேறிவருகின்றன. கடந்த 10 நாள்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை செய்திருந்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் கோடை மழை காரணமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன. நேற்று முன்தினம் (ஏப்ரல்.13) நாளிதழ்களில், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, பூம்புகார், கொள்ளிடம், தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார்கோயில் பகுதிகளில் உள்ள சுமார் 170 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில், சுமார் 70 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படாமல், திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

தார்பாய் போட்டு மூடாத நிலையில் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகியுள்ளன என்று செய்திகள் வந்துள்ளன. மேலும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, செல்லம்பட்டி, சோழவந்தான், திருமங்கலம் உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளும் சேதமடைந்துள்ளன.

நெல் மூட்டைகளை மூடி வைக்க போதுமான தார்பாய்கள் இல்லாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திருச்சி மாவட்டம், லால்குடி உட்பட பல இடங்களில் 10 நாட்களுக்கும் மேலாக விவசாயிகளிடம் இருந்து குறித்த காலத்தில் நெல் கொள்முதல் செய்யப்படாததால், அவை மழையில் நனைந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கடந்த வாரம் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

கொள்முதல் செய்த நெல்லை பாதுகாப்பாக வைக்காததால், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு மக்களின் வரிப் பணம் வீணாவது இந்த விடியா ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது. எனவே, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல், வேளாண் துறையில் சாகுபடி பரப்பை முறையாகவும், துல்லியமாகவும் கணக்கெடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக புகார்கள் வருகின்றன. குறிப்பிட்ட விவசாயிகளிடம் இருந்து மட்டும் நெல் கொள்முதல் செய்யப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை அரசுக்கு அளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

சேதமடைந்த பயிர்கள் கணக்கெடுப்பு ஏற்கெனவே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடைசி வாரமும், ஜனவரியில் முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக முழுமையாகக் கணக்கெடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் பேசினேன். ஆனால், அச்சமயத்தில் பல இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்று பல விவசாய சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன.

கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கோடை மழையினால் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் ஒன்றியத்தில் நெற்பயிர்களும், பெரியகுளத்தில் 50 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வெற்றிலை கொடிக்கால்களும் சேதமடைந்து, விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று இன்றைய நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வந்துள்ளன.

இதுபோல், தமிழ் நாடு முழுவதும் பல மாவட்டங்களில் தொடர் மழையின் காரணமாக சேதமடைந்துள்ள பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து பாதிப்படைந்த விவசாயப் பெருமக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றும், மேலும், நெல் சாகுபடி செய்த அனைத்து விவசாயிகளிடம் இருந்து கால தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், மழையினால் பாதிப்படைந்த சேதங்களுக்கு உடனடியாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இந்த மக்கள் விரோத அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழுக்கு என்றால் எந்த நேரத்திலும் வரத்தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.