ETV Bharat / state

வழக்கறிஞர்கள் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

author img

By

Published : Jun 29, 2021, 4:31 PM IST

கரோனா பேரிடர் காலத்தில் அதிகம் பாதித்த பிரிவினருக்கு கரோனா சிறப்பு நிதி உதவி அறிவிப்பினை சட்டப்பேரவையில் நான் அறிவிக்க இருந்தேன்; ஆனால், எதிர்பாராத விதமாக தேர்தல் தேதி அறிவித்தபடியால், மக்கள் நலத் திட்டங்கள் பெரும்பாலானவற்றை சட்டப்பேரவையில் என்னால் அறிவிக்க இயலாமல் போய்விட்டது; எனவே, தற்போதைய அரசு அதை நிறைவேற்ற வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.

பழனிசாமி
எடப்பாடி

சென்னை: வழக்கறிஞர்களுக்கு நிவாரணம், கரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூன்.29) வெளியிட்ட அறிக்கையில்,`சட்டம் என்பது ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞர்களின் வாதம் ஒரு விளக்கு’’ என்றார் அண்ணா.

இவ்வாறு வெளிச்ச விளக்குகளாக தங்கள் வாதங்களை நீதிமன்றங்களில் எடுத்து வைத்து, நீதி கிடைத்திட அயராது போராடும் அந்த வழக்கறிஞர் சமுதாயத்தைச் சார்ந்த பெரும்பான்மையோரின் பொருளாதார நிலை பொதுவாக பிரகாசமாய் இருப்பதில்லை.

பல நலத்திட்டங்கள்

அப்படிப்பட்ட வழக்கறிஞர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்திலும், அவரைத் தொடர்ந்து வந்த அதிமுக அரசாலும் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டன.

* வழக்கறிஞர்கள் சேமநல நிதி ரூ. 7 லட்சமாக உயர்த்தப்பட்டது.

* 1000 இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

* வழக்கறிஞர்கள் சங்கங்களில் புதிய நூலகம் அமைப்பதற்கு ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாடு முழுவதும் 7 அரசு சட்டக் கல்லூரிகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.

* திருச்சி, ஸ்ரீரங்கத்தில் தமிழ் நாடு தேசிய சட்டப் பள்ளி என்ற (சட்டப் பல்கலைக்கழகம்) திறக்கப்பட்டது.

* உலகத் தரத்தில் சென்னை தரமணியில் ரூ. 100 கோடி செலவில் புதிய டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

இவ்வாறு அரசின் சார்பில் புதிய சட்டக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்டதால், சட்டம் பயில வேண்டும் என்று ஆர்வம், கொள்கையோடு இருக்கும் ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவானதோடு, தரமான சட்டக் கல்வியினை தமிழ்நாடு மாணவர்களுக்கு வழங்கிய அரசு, அதிமுகவின் அரசாகும்.

சிரமத்தில் வழக்கறிஞர்கள்

இதனால் தமிழ்நாட்டில் திறமையான இளம் வழக்கறிஞர்கள் நீதிமன்றப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய கரோனா பேரிடர் காலத்தில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீதிமன்றங்களில் பெரும்பாலான நாட்கள் காணொலி வாயிலாக மட்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததால், நீதிமன்றத்தில் நேரடி விசாரணை நடக்கும்போது உள்ள நிலை இல்லை.

அதாவது, மூத்த வழக்கறிஞர்களின் வாதத் திறமைகளை நேரில் பார்த்தல், வாதி, பிரதிவாதிகளிடம் நேரடியாகப் பேசி அவர்களின் குறைகளை தெளிவாக கேட்கக்கூடிய நிலைமை போன்ற பல நேரடி பயிற்சிகளைப் பெற இயலாத நிலை தற்போது உள்ளது.

எனவே, பெரும்பாலான வழக்கறிஞர்கள் அனுபவம் மற்றும் பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வழக்கறிஞர்கள் நமது நாட்டின், நமது சட்டத்தின், நமது சமுதாயத்தின் தூண்கள்.

உதவி கோரிய வழக்கறிஞர்கள்

உண்மை நிலைகளை நீதியின் முன் எடுத்து வைக்கும் வெளிச்ச விளக்குகள். கடந்த பிப்ரவரி மாதம் 2021 சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, கரோனா பேரிடர் காலத்தில் வாழ்விழந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுக்கு உதவி அளிக்கக் கோரி மனுக்கள் அளித்திருந்தனர்.

குறிப்பாக, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தனியார் பேருந்துகள், ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பார் கவுன்சிலால் பரிந்துரைக்கப்படும் உதவி கோரும் வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்களின் அலுவலகங்களில் பணிபுரியும் குமாஸ்தாக்கள் என்று கரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட பிரிவினர் என்னிடம் அரசின் உதவி கோரி மனுக்கள் அளித்தனர்.

ரூ.50 லட்சம் நிவாரணம்

இப்படி, கரோனா பேரிடர் காலத்தில் அதிகம் பாதித்த பிரிவினருக்கு கரோனா சிறப்பு நிதி உதவி அறிவிப்பினை சட்டப்பேரவையில் நான் அறிவிக்க இருந்தேன்.

ஆனால், எதிர்பாராத விதமாக, தேர்தல் தேதி அறிவித்தபடியால் மக்கள் நலத் திட்டங்கள் பெரும்பாலானவற்றை சட்டப்பேரவையில் என்னால் அறிவிக்க இயலாமல் போய்விட்டது.

தற்போதைய திமுக அரசு, மேலே குறிப்பிடப்பட்டவர்களின் நிலையை உணர்ந்து இதுவரை எந்தவிதமான நலத்திட்ட உதவிகளையும் அறிவிக்கவில்லை.

குறிப்பாக, இளம் வழக்கறிஞர் சமுதாயத்தினருக்கு கரோனா பேரிடர் சிறப்பு நலத் திட்ட உதவிகள் வழங்காதது மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக, கரோனா பேரிடர் காலத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர்களின் குமாஸ்தாக்களுக்கும் உடனடியாக கரோனா நிவாரண நிதியும், வாழ்வாதார நிதியும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கரோனா நோய் தொற்றுக்குப் பலியான வழக்கறிஞர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: வெளியானது சிஏஜி அறிக்கை: நெருக்கடியில் அதிமுக!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.