ETV Bharat / state

'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்': எதிர்ப்பு தெரிவித்து உயர்நிலை குழுவுக்கு கடிதம் எழுதிய திமுக..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 8:47 PM IST

DMK Letter: 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிடுமாறு திமுக சார்பாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Arivalayam
Arivalayam

சென்னை: 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' திட்டத்தைச் செயல்படுத்த பாஜக அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில் இதற்காக அண்மையில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' திட்டத்தைக் கைவிடுமாறு திமுக, உயர்மட்டக் குழுவிற்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இது குறித்து, திமுக சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகக் கடந்த டிச.23ஆம் தேதி சட்ட ஆணையம், தி.மு.க-வின் கருத்துக்களைக் கோரியது. இதற்கு தி.மு.க. தன்னுடைய கடிதத்தின் வாயிலாக இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதில், கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் என்னவென்றால், 2022ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்டசபைகளுக்குத் தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத் தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால் தற்பொழுது, மத்திய அரசு இதை விரிவுபடுத்தி பாராளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், குடியரசுத் தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.

  • பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களினால் சாத்தியமற்றது என்பதை திமுக ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “சுதந்திரமான, நேர்மையான” தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது.
  • ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும் அப்படிக் கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும்- இந்த நடைமுறையை திமுக எதிர்க்கிறது.
  • மத்தியில் ஆளுங்கட்சியும் மெஜாரிட்டியை இழந்தால் ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் ஒரே நாடு ஒரே தேர்தல் முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.
  • ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநிலக் கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தித் தராது.
  • உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
  • ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் அதை எதிர்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு, தேர்தல் ஆணையர் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு எல்லாம் இப்போது இருப்பது போல் 10 மடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். தேர்தல் அதிகாரிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதை விட 3 முதல் 5 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால்- கட்டுக்கடங்காத செலவினத்தை ஏற்படுத்தும் என்பதால் இது நடைமுறை சாத்தியமற்றது.
  • ஒரே நேரத்தில் நகராட்சி, பஞ்சாயத்து, சட்டமன்றம், பாராளுமன்ற தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையத்திடம் போதிய வாக்குப்பதிவு இயந்திரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கே பல லட்சம் கோடி ரூபாயைச் செலவிட வேண்டிய நிதிச் சுமை தேர்தல் ஆணையத்திற்கு ஏற்படும் என்பதால் இந்த தேர்தல் நடைமுறையால் நிதி சிக்கனம் ஏற்படாது.

இந்த அனைத்து காரணங்களினால் 'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' என்ற நடைமுறையை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. ஆகவே, உயர்நிலைக்குழு இது தொடர்பான தனது விசாரணையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் திமுக சட்டத்தின் வழி கொண்டு நடவடிக்கையை எடுக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பதவி விலகக்கோரி ஜி.எஸ்.டி துணை ஆணையர் பாலமுருகன் உண்ணாவிரதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.