ETV Bharat / state

மாமூல் தராததால் டிபன் கடை சூறையாடல்.. திமுக நிர்வாகி கைது!

author img

By

Published : Jan 7, 2023, 7:47 PM IST

கோயம்பேடு பகுதியில் டிபன் கடை நடத்தி வரும் பாஜக தொண்டர் மாமூல் தர மறுத்ததால் அவரது டிபன் கடையை சூறையாடிய புகாரில் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமுல் தரமறுத்த பாஜக உறுப்பினர்; கடையை சேதப்படுத்திய திமுக நிர்வாகி
மாமுல் தரமறுத்த பாஜக உறுப்பினர்; கடையை சேதப்படுத்திய திமுக நிர்வாகி

மாமுல் தரமறுத்த பாஜக உறுப்பினர்; கடையை சேதப்படுத்திய திமுக நிர்வாகி

சென்னை: கோயம்பேடு சேமத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன். பட்டதாரியான இவர் திமுகவிலிருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் தேவேந்திரன் கோயம்பேடு மார்க்கெட் அருகே இரவு நேரத்தில் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த வாரம் 127வது வட்ட திமுக நிர்வாகியான விஸ்வநாதன் என்பவர் சபரிமலை ஐயப்பனுக்குப் பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி கோயம்பேடு மார்க்கெட் அருகே உள்ள தள்ளுவண்டி கடைகளில் பணம் வசூலித்து வந்துள்ளார். அப்போது தேவேந்திரனிடம் 500 ரூபாய் கேட்டப்போது, 200ரூபாய் மட்டுமே தரமுடியும் என கூறியதால் விஸ்வநாதனுக்கும், தேவேந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் விஸ்வநாதன், "இந்த இடத்தில் எப்படிக் கடை நடத்துகிறாய் என பார்க்கலாம்" எனவும் சபரிமலைக்குச் சென்றுவிட்டு உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி மிரட்டிவிட்டுச் சென்றதாக தேவேந்திரன் கூறினார். இந்த நிலையில் நேற்றிரவு திமுக நிர்வாகியான விஸ்வநாதன் தனது கூட்டாளிகளுடன் வந்து தேவேந்திரனைத் தாக்கி, அவர் நடத்தி வந்த தள்ளுவண்டியை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும் மாமூல் தராமல் கடை நடத்தமுடியாது என கொலை மிரட்டல் விடுத்தும் தப்பிச் சென்றுள்ளார்.

கோயம்பேடு காவல் நிலையம் அருகே இச்சம்பவம் நடைபெற்றதால் தேவேந்திரன் சி.எம்.பி.டி காவல் நிலையத்தில் திமுக நிர்வாகி விஸ்வநாதன் மீது புகார் அளித்தார். புகாரில் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாமூல் கேட்டு கடையை உடைத்தது தெரியவந்ததால், திமுக நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் அவரது கூட்டாளி முத்து ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீது மாமூல் கேட்டு மிரட்டுதல், சொத்துக்களை சேதப்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பணிகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திமுக நிர்வாகி விஸ்வநாதன் ஏற்கனவே கட்சி மீட்டிங் நடத்த வேண்டும் என அப்பகுதி வாசியிடையே பணம் வசூலிப்பில் ஈடுபட்டபோது, நலத்திட்ட உதவி டோக்கன் தரவில்லை எனத் தனது மனைவி பணம் தரமறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக தேவேந்திரன் தெரிவித்தார்.

திமுக நிர்வாகி விஸ்வநாதன் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் கடை வியாபாரிகளை மிரட்டி மாமூல் வசூலிப்பில் ஈடுபட்டு வருவதாக தேவேந்திரன் குற்றஞ்சாட்டினார். படித்த வேலை கிடைக்கவில்லை என்பதால் தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வருவதாகவும், ஆனால் மாமூல் கேட்டு கடையை உடைத்ததால் அடுத்து என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை எனக் கண்ணீர் மல்க தேவேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய ஐடி அதிகாரிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிஐ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.