ETV Bharat / state

தமிழகம் முழுவதும் 50 சதவீத பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விநியோகம் முடக்கம் - பால் முகவர்கள் குற்றச்சாட்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 4, 2023, 1:02 PM IST

Aavin Green milk packets distribution: ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகமானது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில் சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்தென்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதாக பால் முகவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 50% பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டு விநியோகம் முடக்கம்
தமிழகம் முழுவதும் 50% பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டு விநியோகம் முடக்கம்

சென்னை: தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

பாலில் உள்ள கொழுப்புச் சத்தின் அடிப்படையில் பாக்கெட்டுகளின் நிறம் நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், பச்சை பால் பாக்கெட்டுகளில் உள்ள பால் 4.5 சதவீத கொழுப்புச் சத்துள்ள நிலைப்படுத்தப்பட்ட பாலாகும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக இந்த பச்சை பால் பாக்கெட்டுகளில் விநியோகம் குறைந்துள்ளது.

சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நேரடி ஆவின் பாலகங்கள் மற்றும் பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் விநியோகமானது 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், "தினசரி இரவு தூங்கி, அதிகாலையில் பால் விநியோகத்திற்காக எழும் போதே இன்று ஆவின் பால் பாக்கெட்டுகள் எவ்வளவு வருமோ?, எவ்வளவு பற்றாக்குறையாக தருவார்களோ? பச்சை நிற பால் பாக்கெட் வருமா? வராதா? சில்லரை வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன பதில் சொல்வது? பற்றாக்குறையான பால் பாக்கெட்டுகள் விநியோகத்தை எப்படி சமாளிப்பது? என்கிற மன உளைச்சலுடனேயே பால் முகவர்களின் பணி தொடங்குகிறது.

இதையும் படிங்க: கடந்த 500 நாட்களாக விலையில் மாற்றமின்றி பயணிக்கும் பெட்ரோல், டீசல் - காரணம் என்ன?

மேலும், தற்போதைய நிலவரத்தை பார்க்கும்போது, தனியார் பால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ஆவினின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு, 2006 - 2011ஆம் ஆண்டின் நிலை ஆவினிற்கு மீண்டும் வந்திருக்கிறதோ?” என்கிற மிகப்பெரிய சந்தேகம் எழுகிறது.

ஏனெனில் தமிழகம் முழுவதும் ஆவின் பால் விநியோகமானது திட்டமிட்டு 50 சதவீதத்துக்கு மேல் குறைக்கப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களுக்கு சரியாக ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்கள் அல்லல்படுவதோடு, தங்களின் வாழ்வாதாரத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த தகவல் ஊடகங்கள் வாயிலாகவும், உளவுத்துறை அதிகாரிகள் மூலமாகவும் அரசின் கவனத்திற்கு தொடர்ச்சியாக சென்ற பிறகும் கூட, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சரோ, தமிழக முதல்வரோ இதுவரை வாய் திறக்காமல் இருப்பதும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் நமது சந்தேகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக இருக்கிறது.

மேலும், ‘ஊரே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்’ என்பதை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தி மற்றும் ஆவின் பால் விநியோகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: என்எம்சி அறிவிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.