ETV Bharat / state

பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்த கூடாது - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

author img

By

Published : Oct 20, 2022, 9:45 PM IST

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்த கூடாது
பிளாஸ்டிக் உற்பத்தியை ஏன் நிறுத்த கூடாது

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தாக்கல் செய்த வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வில் இன்று (அக்-20) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழ்நாடு அரசு தரப்பில் சீனிவாசன் ஆஜராகி, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகப் பாக்கு மட்டையில் செய்த பொருட்கள், மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தத் தீவிரம் காட்டிவருவதாகவும் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரிக்கும் இயந்திரங்களை அக்டோபர் 28ம் தேதி முதல் செயல்படுத்தப் போவதாகவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மாற்றுப் பொருட்கள் குறித்துப் பிரபலப்படுத்துவது தொடர்பான மாசுக்கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இன்னும் குறையவில்லை என்றும், அதன் உற்பத்தியை ஏன் நிறுத்தக்கூடாது? அதை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் எத்தனை இயங்குகின்றன என்றும் கேள்வி எழுப்பினர். பதிவுசெய்யப்படாமல் செயல்படும் நிறுவனங்களுக்குச் சீல் வைக்க வேண்டும் எனக் கூறினர். மேலும் இது போன்று எத்தனை நிறுவனங்கள் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

மூடப்பட்ட 180 நிறுவனங்கள்: நீதிபதிகளின் கேள்விக்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர் இதுவரை 180 நிறுவனங்கள் மூடப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளித்தார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதிக பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், நிகழ்ச்சிக்குப் பிறகு உயர் நீதிமன்ற வளாகம் குப்பை காடாகிவிடுவதாகவும் குறிப்பிட்டனர்.

அப்போது பார் கவுன்சில் தரப்பில் வழக்கறிஞர்கள் எம்.வேல்முருகன், சந்திரசேகர் ஆகியோர் ஆஜராகி, இதுகுறித்து வழக்கறிஞர் பதிவுக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகத் தெரிவித்ததுடன், முதன்முறை பட்டதாரி என்ற முறையில் பாராட்ட வருவோரும், குடும்பத்தினரும் பரிசுப் பொருட்களை வாங்கி வருவதால் குப்பை சேர்வதாகத் தெரிவித்தனர்.

வழக்கறிஞர் பதிவு செய்பவர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதிக்கக் கூடாது எனப் பரிசீலிக்கும்படி அறிவுறுத்தினர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை வெளியிடும்படி சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்கத் தகுதியில்லை; மறு ஆய்வு கோரிய மனு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.