ETV Bharat / state

பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கப்படும் - ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதில்

author img

By

Published : Dec 30, 2022, 8:07 AM IST

பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பொங்கல் வேட்டி சேலை வழங்கப்படும் - ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதிலடி
பொங்கல் வேட்டி சேலை வழங்கப்படும் - ஈபிஎஸ்க்கு அமைச்சர் பதிலடி

சென்னை: பொங்கலுக்கு வேட்டி சேலைகள் வழக்கம் போல் வழங்கப்படும். அதனை நாளிதழ்களையே பார்க்காத அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்ட தேவை இல்லை என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், 'பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்காவிட்டால் போராட்டம் என்று எடப்பாடி பழனிசாமி ஓர் அர்த்தமற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நவம்பர் 19ஆம் தேதி தலைமைச் செயலகத்தில், பொங்கல் திருநாளையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி, சேலைகளின் தரத்தினையும், சேலைகளின் வண்ணங்களையும் ஆய்வு செய்து, பணிகளை விரைவில் முடிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரான நான் உட்பட பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு பொங்கலுக்கு வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆய்வுக் கூட்டம் குறித்த செய்திகள் அனைத்துப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்தது. இதைக்கூட பார்க்காமல் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி பொங்கலுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு வெற்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

1 கோடியே 79 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் முழுமையாக பொங்கல் திருநாளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும். 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த கொள்கை அளவிலான ஆணைகள் வழங்கியும் மற்றும் ஏற்கனவே அதற்காக ரூபாய் 487.92 கோடி ஒதுக்கீடு செய்தும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இத்திட்டத்திற்குத் தேவையான வேட்டி சேலைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவீடுகளுடன் தரமான நூல்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதோடு திட்டத்தினை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அவர் இனிமேலாவது பத்திரிகைகளையும், ஊடகங்களையும் பார்த்து அரசு செய்து வரும் சாதனைகளை உணர்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'இந்திய சட்ட ஆணையம் ஈபிஎஸ்-யை குறிப்பிட்டு கடிதம் அனுப்பியது தவறானது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.