ETV Bharat / state

பல் பிடுங்கிய விவகாரம் - அனைத்து வழக்குகளும் சிபிசிஐடிக்கு மாற்றம்

author img

By

Published : Apr 19, 2023, 9:01 PM IST

நெல்லையில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

பல் பிடுங்கிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம்
பல் பிடுங்கிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது புகார் எழுந்தது. அப்போது, இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து, இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் அனைவரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி, அறிக்கையையும் தயார் செய்து வருகின்றனர்.

மேலும், பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக அமுதா ஐஏஎஸ் தலைமையில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீது கொலை மிரட்டல், ஆயுதங்களைக் கொண்டு சித்திரவதை செய்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

பல் பிடுங்கிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
பல் பிடுங்கிய விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

இந்த நிலையில் விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ்சின் இடைக்கால அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு தமிழ்நாடு அரசுக்கு விசாரணை அதிகாரி அமுதா ஐஏஎஸ் தலைமையிலான உயர்மட்ட விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

எனவே, ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் மீதான பல் பிடுங்கிய வழக்கு உள்பட அதனைச் சார்ந்த அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், அடுத்த கட்டமாக பல்வீர் சிங்கை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ரூ.50,000 லஞ்சம் கொடுத்த போலீசார்? - பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர் பகீர் பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.