ETV Bharat / state

’கரோனா 3ஆவது அலை வந்தால் காவல் துறைக்கு அதிக ரிஸ்க்’ - டிஜிபி சைலேந்திரபாபு

author img

By

Published : Aug 12, 2021, 7:04 AM IST

கரோனா முதல் இரண்டு அலைகளில் காவல் துறையின் பணி முக்கியமானது என்றும் மூன்றாவது அலை வந்தால் காவல் துறைக்கே அதிக ஆபத்து இருக்கும் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கு அதிக ரிஸ்க்
காவல்துறைக்கு அதிக ரிஸ்க்

சென்னை: எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலையை காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று (ஆக.11) பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

அப்போது அவருடன் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உடனிருந்தார். தனியார் நிறுவனத்தின் சார்பில் 37 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய சைலேந்திரபாபு, "கரோனா தொற்றின் முதல், இரண்டாம் அலைகளின்போது முக்கியமாக களப்பணியாற்றியவர்கள் காவல் துறையினர். காவல் துறையினர் முன்களப்பணியாளர்களாக உள்ளனர். காவல் துறையில் கரோனா தொற்றால் 136 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை காவல் துறையில் மட்டும் 39 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

காவல் துறையினரின் உயிர்த்தியாகம்

பெரும் உயிர்த்தியாகத்தை காவல் துறை செய்துள்ளது. இன்னும் பணி இருப்பதால் தடுப்பூசி போட்டுள்ளோம். தமிழ்நாட்டில் 98 விழுக்காடு காவலர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாவது டோஸ் 92 விழுக்காடு முடித்துள்ளோம். இன்னும் சில நாள்களில் 100 விழுக்காடு காவல் துறையினர் தடுப்பூசி போட்டு விடுவார்கள். காவலர்களை பாதுகாக்கக்கூடிய எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

கரோனா மூன்றாவது அலை வரலாம் என எதிர்நோக்குகிறோம். முன்னெச்சரிக்கையாக செயல்பட உள்ளோம். அதுதான் சாமர்த்தியமானது. அதுதான் போர் தந்திரம். இனிமேல் எந்த இழப்பும் வந்து விடக்கூடாது.

உடல் நலன் பேண விடுமுறை

நாம் முன்களப்பணியாளர்கள். ரோட்டில் நிற்கிறோம். கரோனாவால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லும்போது கூட காவல் துறையினர் இருக்கின்றனர். காவல் துறையினருக்கு அதிகமான ரிஸ்க் இருக்கிறது.

காவலர்கள் நலன் பேணி காக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. காவலர்களின் உடல் நலனை பேணி காக்கவே காவல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

காவல்துறைக்கு அதிக ரிஸ்க்

இந்த மருத்துவனைக்கு நானும் வருவேன். ஒரு முறை 600 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி விட்டு மிகச் சோர்வாக இந்த மருத்துவமனைக்கு வந்தேன். வெயில் காலத்தில் 600 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டினேன். மிகவும் சோர்வாகிவிட்டதால் இந்த மருத்துவமனையில்தான் சிகிச்சைப் பெற்றேன்" என்றார்.

காவலர்கள் குடும்பங்களுக்கு பிரத்யேக மருத்துவ முகாம்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், "கரோனா 2ஆம் அலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர்கள் தங்களது உயிர்களை பொருட்படுத்தாமல் மக்களுக்காக பணியாற்றினர். சென்னையில் 11 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த மருத்துவ முகாம்களில் காவலர்களின் குடும்பத்தினருக்கு அனைத்து விதமான சிகிச்சையையும் அளிக்க உள்ளோம்.

அடுத்த மாதம் முதல் காவலர்களுக்கு ஆறு ஆம்புலன்ஸ் மூலமாக டெஸ்டிங் சென்டர் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தல் அட்டவணை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.