ETV Bharat / state

மு.க.ஸ்டாலின் ஓர் சர்வாதிகாரி.. இந்தியாவுக்கு தலைவராகும் திறன் கொண்டவர் அண்ணாமலை.. ராஜ்நாத் சிங் சென்னையில் பேச்சு!

author img

By

Published : Jun 20, 2023, 10:13 PM IST

பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையில் இன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பிரதமர் மோடி குறித்தும் பாஜகவின் அரசியல் வளர்ச்சி திட்டங்கள் மக்களுக்கு எடுத்துரைத்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஓர் சர்வாதிகாரி போல் செயல்படுவதாக கடுமையாக விமர்சனம் செய்தார்.

பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்கும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்
பாஜகவின் கடந்த 9 ஆண்டு கால வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்கும் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 9 ஆண்டு நிறைவு சாதனை பொதுக்கூட்டம் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில் தாம்பரம், சண்முகம் சாலையில் நடைபெற்றது. இந்தப் பொதுக் கூட்டத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தமிழகம் உற்சாகம் மிகுந்த பண்பாடு கலந்த நகரமாகும். ராஜராஜ சோழன்,ராஜேந்திர சோழன் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகள் ஆண்ட நகரம். அவர்கள் படைகளையாளும் திறமைகளில் யுக்தி பெற்றவர்கள். அவர்கள் பிறந்த பூமியில் நான் தற்போது இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். திருவள்ளுவர் போன்று பல கவிஞர்களையும், கலைஞர்களையும் கொண்டது தமிழ்நாடு.

‘தமிழ்மொழி எங்கள் உயிர்மொழி’ - அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம்: தமிழ் மொழி உலகிலேயே மிகப் பழமையான மொழி. தமிழ் மொழி மிகவும் அழகான மொழி மட்டுமல்ல. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் பிறப்பு மொழியாகவும், பிற மொழிகளுக்கு உருவாக்க மொழியாகவும் இருந்து வருகிறது. மேலும் சித்தர்களும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் வாழ்ந்த இந்த புண்ணிய பூமிக்கு வருகை தந்ததைப் பெருமையாகக் கொள்கிறேன். திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த தமிழகத்திற்கு நான் தற்போது வந்திருக்கிறேன். திருக்குறள் நூல் மட்டுமல்ல, இந்திய அரசியலில் மிக முக்கியமான முடிவுகளை மோடி எடுப்பதற்குத் திருக்குறள் வழிவகை வகிக்கிறது. நான் மிக தொன்மை மொழியான தமிழ் மொழி பேசத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்குத் தமிழ் மொழி தெரியாததால் எனது தாய் மொழியான இந்தியில் பேசுகிறேன். அதனை மொழி பயிற்சி செய்து வருவார்கள்” எனத் தமிழ் மொழியின் பெருமை குறித்தும் அதன் தொன்மைக் குறித்தும் பேசினார்.

மத்தியில் நிலைநிற்கும் தமிழகத்தின் செங்கோல்: தொடர்ந்து பேசிய அவர், “பழமையான செங்கோல் என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தெரிந்திருந்தது. தற்போது நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்ட நிலையில், இந்தியா முழுவதுமே செங்கோல் உடைய பெருமை தெரியவந்துள்ளது. செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய போது புதிய வரலாறு இந்தியாவில் உருவாகியுள்ளது. தமிழகத்தின் பெருமையை ஜனநாயகம் மன்றத்தின் கோவிலான நாடாளுமன்றத்தில் நிறுவிய நமது பிரதமருக்கு நன்றியைத் தெரிவிக்கக் கைதட்டி பாராட்டுகளையும் நன்றிகளையும் வெளிப்படுத்துவோம். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளில், ஆரம்பத்தில் மந்தமான வளர்ச்சி குறைவான வளர்ச்சி மட்டுமே நம்மிடம் இருந்தது. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இந்தியாவிற்கு உலக அளவில் மிகப் பெரிய உயரமும் மதிப்பும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இந்தியா என்ன சொல்லுமோ என்று உலக நாடுகள் அனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது. உலக நாடுகள் இந்தியாவின் குரலுக்கு உயர்வு மதிப்பும் கொடுத்து வருகிறது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது - இந்தியா கண்ட வளர்ச்சிப் பாதை: இந்தியா எந்த நேரத்திலும் எந்த நோக்கத்திலும் போர் தொடராது. ஆனால் இந்தியாவை எந்த நாடு சீண்டினாலும் நாம் சும்மா விட மாட்டோம். உலக பொருளாதாரத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. மற்ற நாடுகளைக் குறிப்பிடும் போது இந்தியா மிகப் பெரிய வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும். கடந்த 2015-16 தனிநபர் வருமானம் எந்த அளவுக்கு இருந்ததோ அதனை விட தற்போது 2022 - 23 ஆண்டுகளில் அந்த வளர்ச்சி பன்மடங்காக உயர்ந்துள்ளது. சீனாவைத் தாண்டி இந்தியா அதிகமான செல்போன்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். முன்பு வெறும் இறக்குமதி செய்யும் நாடாகத்தான் இந்தியா இருந்தது. தற்போது ராணுவ தடவாளங்களை போன்ற பல்வேறு பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நாடக இந்தியா உருவெடுத்துள்ளது.

மொத்த ஆயுதங்களும் இந்தியர்களால் இந்தியாவுக்குத் தயார் செய்வதோடு மட்டுமல்லாமல் உலகம் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம். ராஜீவ் காந்தி கூறும்போது, மக்களுக்காக 100 ரூபாய் கொடுத்தால் அதில் 15 ரூபாய் தான் மக்களிடம் போய்ச் சேர்வதாகக் கவலை அடைந்தார். ஆனால் தற்போது பிரதமர் மோடி மக்களுக்காக 100 ரூபாய் கொடுக்கும் போது, அந்த முழு பணம் மக்களிடையே போய் சென்று அடைகிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் பேசிக் கொண்டே இருக்கக் கூடாது. செயல்களில், செயல் வடிவில் செய்து காட்ட வேண்டும். அப்போது தான் இப்படியான செயல்களை ஒழிக்க முடியும். தமிழகத்தில் எந்த அளவுக்கு ஊழல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்தியா முழுவதும் தெரிகிறது. ஊழல் இல்லாத ஆட்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க மக்கள் பாஜகவுக்கு ஒருமுறை வாய்ப்பு தரவேண்டும்.

வள்ளரசு நாடுகளுக்கு டஃப் கொடுக்கும் இந்தியா: பாஜக ஆட்சியில் ஊழல் செய்பவர்கள் அரசு பதவியில் இருக்க மாட்டார்கள் சிறையில் தான் இருப்பார்கள். சுதந்திரம் பெறப்பட்ட நாட்களில் காங்கிரஸ் தான் ஆட்சியிலிருந்தது. சுதந்திரம் அடைந்தபோது 74 விமான நிலையங்கள் தான் இந்தியாவிலிருந்தது. ஆனால் தற்போது கூடுதலாக 74 விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில்களுக்கு உதாரணமாக ஜப்பான் தான் சொல்லுவார்கள். தற்போது இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் சேவை ஜப்பானையே பின்னுக்கு தள்ளி உள்ளது. நாட்டில் 10 லட்சம் மக்கள் பிரதமர் காப்பீடு திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு முன்பு 14 எய்ம்ஸ் மருத்துவமனை தான் இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.

கரோனா காலத்தில் மக்களுக்கு தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, இரண்டு தடுப்பு ஊசிகளை இலவசமாகப் போட்டவர் மோடி. 120 வெளிநாடுகளுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு மனித குலத்தைக் காத்தவர் மோடி. பாரதிய ஜனதா கட்சி அரசு அமைப்பதற்காக அல்ல நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாதுகாப்பு சாசனத்தை உற்பத்தி செய்யப் பல நிறுவனத்தை அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இருக்கக் கூடாது, வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்பது இந்தியாவில் ஒரு பெருமைக்குரிய மாநிலமாக உள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சி கருதுகிறது. அதனால்தான் தமிழகத்தில் எந்த திட்டங்கள் தொடங்கினாலும், மோடி தொடங்கி வைக்கிறார்.

சமதான குரு பிரதமர் மோடி: பாரதப் பிரதமருடைய ஆசை தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக முன்னேற வேண்டும் என்பது தான். அதை நோக்கி தான் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக கொண்டு வந்த ஒன்பதாண்டு திட்டங்களில் குறிப்பாகத் தமிழகத்தில் ஒரு சில திட்டங்கள் கொண்டு சேர்ப்பதில் சில குறைகள் இருக்கலாம், ஆனால் திட்டங்களை யாராலும் குறை கூற முடியாது. உக்ரைன்,ரஷ்யா போரின் போது நமது நாட்டைச் சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் அந்த நாட்டில் தவித்துக் கொண்டிருந்தனர். மாணவர்களை பத்திரமாக மீட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அதன் பின் இரு நாட்டு அதிபர்களிடம் பேசி போரை முடிவுக்குக் கொண்டுவர உந்துகோலாக செயல்பட்டார்.

இப்படி ஒரு பிரதமரை பாராட்ட மனசு இல்லாமல் எனது நண்பர் ஸ்டாலின் ஏதாவது ஒரு குற்றம் சொல்லி வருகிறார். தொடர்ந்து குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். அவர்(மோடி) பேருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நடவடிக்கையை எடுத்துக் கொண்டிருக்கிறார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகச் செந்தில் பாலாஜியை நாங்கள் கைது செய்து விட்டோம் என்று மத்திய அரசை அவர்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதே செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்தபோது ஸ்டாலின் அவர்மீது பக்கம் பக்கமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். ஆனால் இப்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எடுப்பதாகக் குறை கூறுகிறார். இதுபோல் இரட்டை வேஷம் போடுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சர்வாதிகாரி போல் செயல்படும் மு.க.ஸ்டாலின்: சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட பாஜகவை சேர்ந்த சூர்யா என்ற இளைஞரைக் கைது செய்துள்ளனர். நான் அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தமிழ்நாட்டில் நாம் எப்போதும் நேர்முக அரசியலைச் செய்ய வேண்டும். இதுபோன்று பழிவாங்கும் அரசியலை செய்யக்கூடாது. ஸ்டாலின் என்பது ரஷ்ய சர்வாதிகாரத்தின் பெயர். அதேபோல் சர்வாதிகாரத்துத்தை ஸ்டாலின் தற்போது செய்து கொண்டிருக்கிறார். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கொடுத்து வருகிறோம். மத்தியில் வாஜ்பாய் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கொடுத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர்களின் நன்றியை பாஜக எப்போதும் மறக்காது. அதிமுக தலைவராக இருந்த அவர்கள்(ஜெயலலிதா) மீது தமிழகம் மக்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையையும் வைத்திருக்கிறார்கள். பாஜகவும் அவர்கள் மீது மதிப்பு மரியாதையும் வைத்திருக்கிறது.

மீனவர்களை கைவிட்ட திமுக: அதேபோலத் தான் தமிழக மக்கள் முன்னேற மோடி அவர்கள் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். வாஜ்பாய் போல மோடியும் தமிழக மக்கள் மீது மிகுந்த பாசத்தோடு இருக்கிறார். இலங்கையில் தமிழர்களுக்கு 27,000 வீடு கட்டிக் கொடுத்தவர் பாரத பிரதமர் மோடி. இலங்கையில் வாழும் தமிழர்கள் சாசன உரிமையோடும், மகிழ்ச்சியோடும் வாழ்வதற்குப் பிரதமர் மோடி தேவையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை காங்கிரஸ், திமுக ஆட்சியிலிருந்த தினம் முதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியில் இலங்கை அரசுடன் உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு, மீனவர்கள் பாதுகாப்பாக இருந்து வருகிறார்கள்.

பாஜக சொல்வதைத் தான் செய்யும், செய்து வருகிறது:

சமீபத்தில் 1200 மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டார்கள். அத்தனை பேரும் விடுதலை செய்யப்பட்ட அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளது. பாஜக எதை சொல்கிறதோ அதை தான் செய்கிறது. இந்தியாவில் மற்ற கட்சிகளைக் காட்டிலும் வேறுபட்டுக் காணப்படுகிறது. அதனால் தான் உலக நாடு தற்போது இந்தியாவை நம்பத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் 72 இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன. அவர்கள் அனைவரும் நலமாகவும்,பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழல் இந்தியாவில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் 370-ஐ நீக்கி இந்தியாவின் மாநிலமாக ஜம்மு அண்ட் காஷ்மீர் தற்போது இணைக்கப்பட்டதன் காரணமாக தான், இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது. இதற்கு காரணம் மோடி தான்.

பிரதமரின் சிஸ்யப்பிள்ளை அண்ணாமலை:

ஜனவரி மாதத்திலிருந்து ராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு உள்ளது. பாஜக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்தது போல ராமர் பிறந்த அயோத்தியில் கோயில் கட்டி கொடுத்து உள்ளோம். அண்ணாமலையைப் பார்த்தவுடன் என்னால் சொல்ல முடியும். அவர் தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் தலைவராக உருவாக முடியும். பிரதமர் கொடுத்த கட்டளைகளைத் தமிழகத்தில் அதிவேகமாகச் செயல்படுத்தி வரும் அண்ணாமலையை எவ்வளவு பாராட்டினாலும் அது போதாது. நான் இந்தியில் பேசிய போதும் அனைத்து தாய்மார்கள் என் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டதற்கு உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பாஜகவின் 9 ஆண்டுக் கால வளர்ச்சித் திட்டங்களை விவரித்துக் கூறினார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்.. நடவடிக்கை என்ன? பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.