ETV Bharat / state

அண்ணா பெயரைச் சொல்ல மறந்த காங். எம்எல்ஏ - சுட்டிக்காட்டிய துரைமுருகன்

author img

By

Published : Sep 6, 2021, 6:01 PM IST

சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா பேசியபோது, அண்ணாவின் பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இதை அவை முன்னவர் துரைமுருகன் சுட்டிக்காட்டி விவாதம் நடந்துள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏ
காங்கிரஸ் எம்எல்ஏ

சென்னை: செய்தி மற்றும் விளம்பரத் துறை, கைத்தறி, பத்திரப்பதிவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று (செப்டம்பர் 6) நடைபெற்றது.

விவாதத்தில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவெரா, பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த முதலமைச்சருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

அண்ணா பெயர் குறிப்பிடவில்லை

தொடர்ந்து பேசிய அவர், " ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், கருணாநிதி ஆகியோர் இருந்த இந்த அவையில் நானும் இருப்பதில் பெருமை அடைகிறேன். பருத்தி விற்பனையில் வாடிக்கையாளர்களின் மானியத் தொகை தள்ளுபடி ஒரே மாதிரியாக நடைமுறையில் உள்ளது.

உதாரணத்திற்கு 500 ரூபாய்க்கு பருத்தி வாங்கும் வாடிக்கையாளருக்கும் 1500 ரூபாய்க்கு வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் மானிய தள்ளுபடி 100 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதனை மாற்றி விற்பனை தொகைக்கு ஏற்றவாறு மானிய தள்ளுபடி தொகையையும் மாற்றி அமைத்து விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்" என வலியுறுத்துகிறேன்.

விவாதம்

அதனைத் தொடர்ந்து பேசிய அவை முன்னவர் துரைமுருகன், "ஓமந்தூர் ராமசாமி, காமராஜர், கருணாநிதி பெயரைக் குறிப்பிட்டவர். அண்ணாவை அவர் குறிப்பிடவில்லை. அவர் தெரியாமல் விட்டிருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே தவிர்த்திருந்தால் அது விவாதத்திற்குரியது" எனத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை, திருமகன் ஈவெரா பேசும்போது கருணாநிதியைக் குறிப்பிட்டுப் பேசினார். கருணாநிதி என்றாலே அண்ணாவை குறிப்பிடுவதாகத் தான் அர்த்தம் என்று விளக்கம் அளித்தார்.

இதற்குத் துரைமுருகன் பேசுகையில், செல்வப்பெருந்தகை பெயரைச் சொன்னால் காமராஜர் பெயரை முன்னதாக எடுத்துக்கொள்ள முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

திருமகன் ஈவெரா விளக்கம்

பேரறிஞர் அண்ணாவின் மீது எனக்கு மிகுந்த பற்றும், மரியாதையும் உள்ளது. நான் மறந்து அவரது பெயரைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன் என்றார்.

இதையும் படிங்க: ரூ.5.61 கோடி செலவில் மாமல்லபுரத்தில் கைவினை சுற்றுலா கிராமம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.