ETV Bharat / state

குருநானக் கல்லூரி மாணவர்கள் மோதல்... 12 பேர் மீது வழக்குப்பதிவு.. மீண்டும் மாணவர்கள் மோதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 1:46 PM IST

Guru Nanak College Students Clash: குருநானக் கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் சம்பந்தமாக இருதரப்பிலும் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மாநிலக்கல்லூரி மாணவரை நந்தனம் கல்லூரி மாணவர்கள் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை: வேளச்சேரியில் இயங்கி வரும் குருநானக் கல்லூரியில் இருதரப்பு மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. மாணவர்களிடையே ஏற்பட்ட இந்த மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

கிண்டி, வேளச்சேரி சாலையில் குருநானக் கல்லூரியில் மயிலாப்பூரைச் சேர்ந்த தனுஷ் என்பவர் 3-ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வந்துள்ளார். ஆகஸ்டு 18-ஆம் தேதி தாவரவியல் படிக்கும் மாணவர்கள் கானா பாட்டு பாடியதாகவும், அதனை தனுஷ் கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தாவரவியல் பிரிவு மாணவர்கள், தனுசை தாக்கியதாக தெரிகிறது.

ஆகஸ்டு 23-ஆம் தேதி கல்லூரிக்கு வந்த தனுஷ், தன்னை தாக்கிய தாவரவியல் பிரிவு மாணவர்களை நோக்கி 2 பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் யாருக்கும் எந்த வித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து கிண்டி போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மாணவர்களிடையே நடந்த மோதலில் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் நாட்டு பட்டாசை பயன்படுத்தியதாகவும், அங்கு கத்தி எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் சென்னை காவல்துறை விளக்கம் அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான மாணவர் உள்பட மோதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 18 மாணவர்களை கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கி கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த மோதல் தொடர்பாக 12 மாணவர்கள் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுவரை 9 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 3 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 147 சட்டவிரோதமாக கூடுதல், 148 ஆயுதங்களுடன் கூடுதல், 285 தீ பற்றக்கூடிய பொருட்களை கவனக்குறைவாக கையாளுதல், 294 பி ஆபாசமாக பேசுதல், 506(2) கொலை மிரட்டல் ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் ஒரு தாக்குதல்: மாநில கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயிலும் பிரேம் குமார் என்ற மாணவர் வடபழனி பஸ் டெப்போவில் பேருந்திற்காக காத்திருந்துள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த நந்தனம் கல்லூரியை சேர்ந்த 19 மாணவர்கள் மாநில கல்லூரியை சேர்ந்தவரா என பிரேம் குமாரை மிரட்டி அவரை பைப்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்கிய ஒரு மாணவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த மாணவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் தப்பி ஓடிய மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

நேற்று குருநானக் கல்லூரியில் இருதரப்பு மாணவர்கள் பட்டாசு வீசி மோதலில் ஈடுபட்ட நிலையில், இன்று மீண்டும் கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சென்னை குருநானக் கல்லூரியில் 18 மாணவர்கள் டிஸ்மிஸ்.. வெடி விவகாரத்தில் காவல்துறை விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.