ETV Bharat / state

வ.உ. சிதம்பரனாரின் எழுதி வெளிவராத படைப்புகள் தொகுப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!

author img

By

Published : Nov 18, 2021, 7:38 PM IST

வ.உ. சிதம்பரனாரின் 150ஆவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாகத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள வஉசி பன்னூல் திரட்டு - முதல் தொகுதி மற்றும் வஉசி திருக்குறள் உரை - இரண்டாம் தொகுதி ஆகிய நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி. நினைவு தினத்தில் வெளியிட்டார்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி

சென்னை: வ.உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவினையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் 14 வகையான அறிவிப்புகளைச் சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்தார். அவற்றுள் "வஉ.சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டுத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் சுழகத்தின் மூலமாகக் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் " என்பதும் ஒன்றாகும்.

அதன் தொடர்ச்சியாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை சீராய்வு கூட்டத்தின்போது முதலமைச்சர் அறிவிப்பின்படி வ.உ.சிதம்பரனார் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளை வஉசி நூற்களஞ்சியமாக நான்கு நூல் திரட்டுகளாக ( 4 Volumes ) பதிப்பிக்கலாம் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, விடுதலைப் போராட்ட வீரரும். கப்பலோட்டிய தமிழரும், பழம்பெரும் நூல்களைத் தேடிப் பதிப்பித்து உரை எழுதியவருமான வ.உ.சிதம்பரனாரின் எழுத்துக்கள் வ.உ.சி நூல் களஞ்சியமாக தொகுக்கப்பட்டு அவரது 150 ஆம் பிறந்த ஆண்டான இந்த ஆண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் குறைந்த விலையில் வெளியிடப்படுகிறது.

வ.உ. சிதம்பரனாரின் எழுதி வெளிவராத படைப்புகள் தொகுத்து வெளியீடு

வ.உ.சிதம்பரனாரின் எழுதி வெளிவராத படைப்புகள் மற்றும் அச்சில் இல்லாத படைப்புகளைத் தொகுத்து, முதல் தொகுதி - வஉசி பன்னூல் திரட்டு எனும் தலைப்பிலும், இரண்டாம் தொகுதி - வ.உ.சி திருக்குறள் உரை எனும் தலைப்பிலும் இரண்டு தொகுதிகள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் வெளியிடப்படுகிறது.

வஉசி ஆற்றிய அரசியல் பெருஞ்சொல்

முதல் தொகுதியில் வ.உ.சி. எழுதிய தன் வரலாறு மெய்யறிவு மெய்யறம் ஆகிய நூல்களும் 1927 காங்கிரஸ் மாநாட்டில் அவர் ஆற்றிய அரசியல் பெருஞ்சொல் என்ற உரை, வ.உ.சி. கண்ட பாரதி என்ற நூல் வ.உ.சி.யின் பாடல் திரட்டு வ.உ.சி. கட்டுரைகள் ஆகியவை அடங்கியுள்ளன. மேலும், இத்தொகுதியில் வஉசி பதிப்பித்த திருக்குறள் ( அறத்துப்பால் ) மணக்குடவர் உரை சேர்க்கப்பட்டுள்ளது.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி

வ.உ.சி. எழுதிய இன்னிலை விருத்தி உரையும் சிவஞான போதம் உரையும் இடம் பெற்றுள்ளன . இவற்றோடு வ.உ.சி மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலன் எழுதிய நூல்களான " 'மனம்போல் வாழ்வு ' , ' அகமே புறம் ’, ‘ வலிமைக்கு மார்க்கம் ’ ‘ சாந்திக்கு மார்க்கம் ', ஆகியவையும் உள்ளன.

திருக்குறள் நெறிப்படி

இவை தவிர வ.உ.சி.யின் வேறு சில கட்டுரைகளும் பின்னிணைப்பாக இடம் பெற்றுள்ளன. இரண்டாம் தொகுதி வ.உ.சி. திருக்குறளுக்கு எழுதிய உரையாகும். வஉசியின் தேசப்பணி, தியாகம். தொழிற்சங்கத் தொண்டு ஆகியவற்றுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல வஉசியின் இலக்கியப்பணி.

தன் வாழ்வைத் திருக்குறள் நெறிப்படி அமைத்துக்கொண்ட வ.உ.சி திருக்குறளுக்கான மணக்குடவர் உரையைத் தேடிப் பதிப்பித்தார்.

மணக்குடவர் உரை

கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் நூலாகத் திருக்குறள் திகழ்வதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று மணக்குடவர் உரையை அடிப்படையாகக் கொண்டு வஉசி எழுதிய புதிய உரையாகும்.

தனது திருக்குறள் உரையில் 11ஆம் நூற்றாண்டில் எழுந்த அவைதீக உரையான மணக்குடவர் உரையிலிருந்து 13ஆம் நூற்றாண்டில் எழுந்த வைதீக உரையான பரிமேலழகர் உரை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்கியுள்ளார்.

பரிமேலழகர் உரையிலிருந்து தான் வேறுபடும் இடங்களையும் ஒன்றுபடும் இடங்களையும் சுட்டிக்காட்டி இருப்பதோடு குறளுக்குப் பொருள்கொள்வதில் வாசகனுக்கு உள்ள சுதந்திரத்தையும் எடுத்துக்காட்டிருப்பதை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரலாம்.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி

வெளிவராத படைப்புகள்

வஉசி எழுத்துக்களை ஆய்வு செய்து வெளிவராத படைப்புகளைச் சேகரிப்பதில் புலமை பெற்றுள்ள சென்னை பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் வீ.அரசு பதிப்பாசிரியராக இருந்து இப்பெருந்திரட்டுகளைத் தொகுத்துள்ளார். புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது அட்டைப்படம் வடிவமைத்துள்ளார்.

வ.உ. சிதம்பரனாரின் எழுதி வெளிவராத படைப்புகளை தொகுத்து வெளியிட்ட - முதலமைச்சர்
வ.உ. சிதம்பரனாரின் எழுதி வெளிவராத படைப்புகளை தொகுத்து வெளியிட்ட - முதலமைச்சர்

இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி , தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் இயக்குநர் டி.மணிகண்டன், உறுப்பினர் செயலர் எஸ்.கண்ணப்பன், துணை இயக்குநர் டி.சங்கர சரவணன், ஆலோசகர் ச.அப்பண்ணசாமி, பதிப்பாசிரியர் பேராசிரியர் வீ.அரசு , ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் உடனிருந்தனர்.

வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிலம்பத்திற்கு அங்கீகாரம்; தமிழினத்திற்கு பெருமை - நிறைவேறிய முதலமைச்சரின் முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.