ETV Bharat / state

"தமிழக மீனவர்கள் இலங்கை நாட்டவரால் தாக்கப்படுவதை கட்டுபடுத்த நடவடிக்கை" - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2023, 10:45 AM IST

இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்.
முதல்வர் ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம்.

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை நாட்டவரால் தாக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடிதத்தில், தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், 2023 ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் 9 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாக பாதிப்பதாகக் குறிப்பிட்டு உள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதோடு மட்டுமில்லாமல் மீனவர்களிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்று உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் கூறியுள்ளார்

இதையும் படிங்க: வெளிநாட்டில் பணியில் இருக்கும் போது இறக்கும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை!

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயம் அடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இது மீனவர்களின் மீதான தாக்குதலின் தீவிரத்தை உணர்த்திடும் வகையில் உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம், கடற்பகுதியைச் சார்ந்து உள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக் குறியாக மாற்றுவதுடன், அவர்களின் குடும்பங்களையும், சமூகங்களையும் பாதிக்கின்றன என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு உடனடியாக இந்த சம்பவத்தில் தலையிட்டு, இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்திடத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் உரிய தூதரக வழிமுறைகளைப் பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு, மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டு உள்ளார்.

இதையும் படிங்க: டி.என் சாம்பியன்ஸ் சார்பில் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.