ETV Bharat / state

நீட் விலக்கு மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 1:28 PM IST

Updated : Oct 27, 2023, 4:08 PM IST

CM MK Stalin: தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, மேலும் தாமதமின்றி உடனடியாக ஒப்புதல் அளித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதவிற்கு ஒப்புதல வழங்க குடியரசு தலைவரிடம் தமிழக முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதவிற்கு ஒப்புதல வழங்க குடியரசு தலைவரிடம் தமிழக முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு டெல்லி புறப்பட்டுச் சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இன்று (அக் 27) சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாக நிலுவையில் உள்ள, தமிழ்நாடு இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு 2021-க்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டுமென நேரில் வலியுறுத்தினார்.

பின், தமிழ்நாடு முதலமைச்சர் இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தையும் வழங்கினார். அக்கடிதத்தில், “தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) அடிப்படையிலான மாணவர் சேர்க்கை, ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிரானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றதாகவும், இந்தச் செயல்முறை கடந்த காலங்களில் மாநிலத்தில் நல்ல பலன்களை அளித்ததாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதாலும், அதைத் தொடர்ந்து சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், ப்ளஸ் 2 மதிப்பெண்கள் மூலம் நடைபெற்ற சேர்க்கை முறை நிறுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ந்து, மாற்று வழிகளை செயல்படுத்துவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கிட நியமிக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.இராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 13-9-2021 அன்று 'தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சட்ட முன்வடிவு, 2021 (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 43/2021) நிறைவேற்றப்பட்டு, தமிழ்நாடு ஆளுநருக்கு 18-9-2021 அன்று அனுப்பப்பட்டதாகத் முதலமைச்சர் கூறியுள்ளார்.

ஆளுநர் ஐந்து மாத காலத்திற்குப் பிறகு, மேற்படி சட்டமுன்வடிவினை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்குத் திருப்பியனுப்பிய நிலையில், 8-2-2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், மேற்படி சட்டமுன்வடிவு தமிழ்நாடு ஆளுநரால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த சட்டமுன்வடிவு தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மத்திய உயர் கல்வித்துறை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம் கோரிய அனைத்து விளக்கங்களும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய காலத்திற்குள் வழங்கப்பட்டுள்ளதாக தேதி வாரியாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் போதிய விளக்கங்கள் அளிக்கப்பட்ட பிறகும், இந்த விஷயத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், குடியரசுத் தலைவருக்கு 14-8-2023 அன்று தான் கடிதம் எழுதியிருந்ததாக தெரிவித்தார். அதில், நீட் தேர்வினால் பின்தங்கிய வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மாணவர்கள் தற்கொலைகள் குறித்தெல்லாம் குறிப்பிட்டு, இனியும் தாமதிக்காமல் மேற்படி சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென தான் கோரியிருந்ததை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதோடு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இதுவரை இந்த சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், நீட் விலக்கு தொடர்பான சட்டமுன்வடிவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத காலதாமதம், அதிக கட்டணங்களைச் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பல தகுதி வாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைப் பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பரந்த சட்டமன்ற, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் நோக்கத்தைச் செயல்படுத்திட இயலாமல் முடக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த உணர்வுப்பூர்வமான பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு, நீட் விலக்கு தொடர்பான மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

Last Updated : Oct 27, 2023, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.