ETV Bharat / state

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 10:55 AM IST

Voters list 2023: தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டார்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக் 27) வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, ஆண்டுதோறும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். அதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதன் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தமிழகத்தில் இன்று தொடங்குகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், 17 வயது நிறைவேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பவர்களுக்கு 18 வயது முடிந்ததும் தானாக பெயர் சேர்க்கப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு ஏதுவாக, ஆண்டுதோறும் ஜனவரியில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும்.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க உள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி உள்ள வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டார். இந்த மாவட்ட அளவிலான பட்டியலை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிடுகின்றனர்.

இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் என்விஎஸ்பி (NVSP) இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிறுத்தப்பட்டுள்ளாது.

வருகின்ற நவம்பர் 4, 5, 18, 19ஆம் தேதிகளில் (வார இறுதி நாட்கள்) தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்றும், விண்ணப்பங்களை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பரிசீலனைக்குப் பிறகு வாக்காளர்களின் பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த பணி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், இறுதி வாக்காளர் பட்டியல் 2024ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 21வது நாளாக தொடரும் போர்; காசாவில் இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.