ETV Bharat / state

"பெண்கள் முழுமையாக விடுதலை அடையவில்லை" -  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

author img

By

Published : Mar 8, 2023, 5:00 PM IST

பெண் என்றால் ஆணுக்கு அடிமை என்ற எண்ணம் ஆண்களின் மனதில் இன்னும் இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெண்கள் முழுமையாக விடுதலை அடையவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்
பெண்கள் முழுமையாக விடுதலை அடையவில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சர்வதேச மகளிர் தினம், இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவ்வையார் விருது, பெண் குழந்தை விருது, சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருது ஆகியவற்றை வழங்கினார்.

அவ்வையார் விருது பெற்ற கமலம் சின்னசாமி மற்றும் சிறந்த பெண் குழந்தைகளுக்கான விருது பெற்ற மாணவி இளம்பிறை அளித்த பேட்டி

இதில் அவ்வையார் விருதை நீலகிரியைச் சேர்ந்த கமலம் சின்னசாமியும், பெண் குழந்தை விருதை சேலத்தைச் சேர்ந்த இளம்பிறையும் பெற்றனர். அதேபோல சிறந்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதில் முதல் பரிசை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும், 2ஆம் பரிசை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரும், 3ஆம் பரிசை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “என்னுடைய பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களே! காலையிலேயே இந்த நிகழ்ச்சிக்காக நான் இல்லத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னால், இன்று மகளிர் தினத்தையொட்டி நம்முடைய பெண் காவலர்களுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று எண்ணி, குறிப்பிட்ட சிலரை இல்லத்திற்கு அழைத்து, அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லி அதற்குப் பின்னால், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.

ஆகவே, இன்றைக்கு காவலர்களாக மட்டுமல்ல, இங்கு வந்து இந்த அரங்கத்தில் பார்த்தால் ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். இன்றைக்கு மகளிர் எந்த அளவிற்கு இடம் பெற்றிருக்கின்றனர் என்பதைப் பார்க்கும்போது, நான் உள்ளபடியே மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். தற்போது எனக்கு இருக்கக்கூடிய கவலையெல்லாம், தந்தை பெரியார் இல்லையே, இதைப் பார்த்து ரசிப்பதற்கு இல்லையே என்ற அந்தக் கவலைதான்.

இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, மேயர்களாக, அமைச்சர்களாக, அதிகாரிகளாக பெண்கள் எந்த அளவிற்கு வந்திருக்கின்றனர் என்பதை எண்ணி மகளிர் தின விழாவை பூரிப்போடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். மகளிரை வாழ்த்துகிறோம் என்று சொன்னால், இந்த நாட்டினுடைய வளர்ச்சி என்பது மகளிர் கையில்தான் இருக்கிறது. அதனால் மகளிரை வாழ்த்துவதன் மூலமாக இந்த நாட்டை நாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

பெண்ணாக பிறப்பது மட்டுமே பெருமைக்குரியது அல்ல. அத்தகைய பெண், ஒரு சமூகத்தை வழிநடத்துபவராக உயர்ந்து நிற்பதையே நாம் விரும்புகிறோம். ஏன் இந்த நாடும் விரும்பிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் நாள் “உலக மகளிர் தினம்” கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. மார்ச் 8 என்பது மகளிருக்கு மட்டுமல்ல, மனித குலத்துக்கும், மனித உரிமைகளுக்கும் ஒரு முக்கியமான நாளாக அமைந்திருக்கிறது.

இந்த மகளிர் நாள் விழாவில் இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் பெண்களைக் கண்டறிந்து, அவர்களின் சமூக சேவைகளைப் பாரட்டி விருதுகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக, அவ்வையார் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசின் 2023ஆம் ஆண்டிற்கான அவ்வையார் விருது - இலக்கியம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த முறையில் தொண்டாற்றி வரும் டாக்டர் தமிழ்ச்செம்மல் புலவர் ஆர்.கமலம் சின்னசாமி என்பவருக்கு வழங்கப்பட்டிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உலகில் எந்நாளும் போற்றப்பட வேண்டியவர்கள், பெண்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், சங்ககாலம் முதலே, பெண்கள் உயர்வாகவும், மதிக்கத்தக்கவர்களாகவும் போற்றப்பட்டு வருகின்றனர்.

அந்தக் காலத்திலேயே பெண்பால் புலவர்கள், மிகுதியாக செய்யுள் இயற்றி இருக்கின்றனர். மன்னனையே கேள்வி கேட்கும் துணிச்சல் கண்ணகிக்கு இருந்தது. இரண்டு மன்னர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர், அதற்காக தூது போய் அந்தப் போரை நிறுத்தக்கூடிய துணிச்சல் அவ்வைக்கு இருந்தது. இடையில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளால் பெண்கள் முடக்கப்பட்டார்கள், அடக்கப்பட்டார்கள். இதில் இருந்து பெண்ணை விடுவிக்க ஒரு இயக்கம் தேவைப்பட்டது.

அதுதான் திராவிட இயக்கம். பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. ‘சிறுத்தையே வெளியில் வா’ என்று அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், பெண்ணினத்திற்கும் அறைகூவல் விடுத்தது திராவிட இயக்கம். மாநாடு நடத்தினால் பெண்கள் அதிகமாக பங்கெடுக்க வேண்டும் என்று பெரியார் அழைத்தார். போராட்டம் நடந்தால் தனது மனைவி நாகம்மையாரையும், தங்கை கண்ணம்மாவையும் அழைத்துச் சென்றார், பெரியார்.

‘நாட்டில் நடக்கும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நிறுத்துவது என் கையில் இல்லை, தமிழ்நாட்டில் இருக்கும் இரண்டு பெண்களின் கையில் தான் இருக்கிறது’ என்று 1922ஆம் ஆண்டு காந்தியடிகள் சொல்லக் காரணமானவர்கள் நாகம்மையாரும், கண்ணம்மாளும்தான். இத்தகைய வீறுகொண்ட பெண்களைப் பார்த்துதான் ஏராளமான பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தார்கள். பெரியாருக்கு 'பெரியார்' என்ற பட்டத்தைத் தந்தது பெண்கள்தான்.

அதனுடைய 50ஆம் ஆண்டில்தான், பெரியாருடைய கனவை நனவாக்கக்கூடிய வகையிலே பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை 1989ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கருணாநிதி வழங்கினார். திராவிட இயக்கமானது பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக, துணிச்சல் மிக்கவர்களாக ஆக்கியது என்பதை இளைஞர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச் செறுக்குக்குப் பெயர் பெற்றிருக்கக்கூடிய சிங்கப் பெண்களாக, இந்த இனிய விழாவில் கலந்து கொண்டிருக்கக்கூடிய உங்களை எல்லாம் பார்க்கும்போது, திராவிட இயக்கத்தினுடைய பெண்ணுரிமைப் போராட்டங்களால் விளைந்த பயனை கண்கூடாக இங்கே காண முடிகிறது. இதற்கு வித்திட்டது பெரியார் அண்ணா மற்றும் கருணாநிதி போன்றவர்கள்.

அதேபோல் திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களையும், சாவித்ரி பாய் பூலே, அம்பேத்கர் போன்ற போராளிகளையும் நன்றியோடு பெண்ணினம் நினைத்துப் பார்க்க வேண்டும். இவர்களது வழித்தடத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு, இன்றைக்கு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது, அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு என ஒதுக்கீடு தந்து, அதை இப்போது 40 விழுக்காடாக உயர்த்தி இருக்கிறோம்.

உள்ளாட்சித் தேர்தலில், முதன்முதலில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதி கொண்டு வந்து நிறைவேற்றினார். இன்றைக்கு அது 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கும் மேலாக பெண்கள் இன்றைக்கு மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்று, மக்கள் பணியும் ஆற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் கல்வி - சமூகநீதி - பெண்ணுரிமைத் திட்டங்களை அதிகளவில் திராவிட மாடல் அரசால், நாங்கள் தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

உயர் கல்வியிலும், பள்ளிக்கல்வியிலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையிலும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முன்னுரிமைத் திட்டங்களின் மூலமாக தமிழ்ச் சமுதாயத்தின் மேம்பாடு என்பது பெரும் பாய்ச்சலை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. ஆட்சிக்கு வந்ததும் நான் கையெழுத்திட்ட ஐந்து கோப்புகளில், மகளிருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதும் ஒரு கையெழுத்து என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

இதை சலுகையாக நான் சொல்லவில்லை. மகளிர் உரிமை என்று நான் சொல்வேன். இது பெண்களுடைய சமூகப் பொருளாதார விடுதலையை வழங்கி இருக்கிறது. இதனால், மாதந்தோறும் 600 ரூபாயில் இருந்து 1,200 ரூபாய் வரை செலவு மீதம் ஆகிறது என்று பெண்களே சொல்கிறார்கள். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதைவிட, எத்தனை லட்சம் பெண்கள் பயனடைகின்றனர் என்பதுதான் நம்முடைய லட்சியம்.

மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கக்கூடிய வகையில் எத்தனையோ திட்டங்கள், தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை மாற்றி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை என்று அதை இன்றைக்கு மாற்றிக் காட்டியிருக்கிறோம். ‘புதுமைப் பெண்’ என்னும் உன்னதத் திட்டத்தை உருவாக்கி, அதையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்த திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளில் படித்து கல்லூரிக்குச் செல்லும் மாணவியர்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தைத் திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.

கல்வி என்னும் நிரந்தர சொத்தைப் பெண்கள் அனைவரும் பெற வேண்டும் என்கிற பெண்ணுரிமைக் கொள்கையின் மறு உருவமாகவும், பெண் சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1 லட்சத்து 83 ஆயிரத்து 389 மாணவிகளுக்கு, 82 கோடியே 77 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், அதிகாரம் பொருந்தியவர்களாக பெண்களை உயர்த்துவதற்கான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். பெண்களை உயர் கல்வி படிக்க வைத்தல், அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தருதல், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், கடன்கள் கொடுத்தல், புதிய தொழில்களைச் செய்ய வைத்தல், உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெறுதல் என பெண்களை அனைத்து வகையிலும் முன்னேற்றி வருகிறது, திராவிட மாடல் அரசு.

அனைத்தும் இணைந்த வளர்ச்சிதான் திராவிட மாடல். இதில் ஆணும், பெண்ணும் அடக்கம். பெண்ணை விலக்கி வைத்துவிட்டு எதையும் திட்டமிடுவது இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால், அதில் ஒரு பெண் ஓதுவாரும் இடம் பெற்றுள்ளார். இதுதான் திராவிட மாடல். சட்டத்தின் முன் ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமானவர்கள் என்ற இலக்கை எட்டுவதில், இன்று நாட்டிலேயே நம்முடைய தமிழ்நாடுதான் முன்னோடி மாநிலமாக இருந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம். பெண்கள் பாதுகாப்பு உணர்வுடன் அச்சமின்றி வாழக்கூடிய மாநிலமாகவும் தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது. வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் அண்மையில் அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, அடைக்கலம் தேடி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் அவர் வழக்கு தாக்கல் செய்தார். அந்தளவுக்குப் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

பெண்கள் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். பல பொறுப்புகளுக்கு அவர்கள் வந்திருக்கலாம். பலரும் பொருளாதாரச் சுதந்திரத்தை அடைந்திருக்கலாம். ஆனால், மனரீதியாக பெண் என்றால் ஆணுக்கு அடிமை என்பது, ஆண்கள் மனதில் இன்னும் இருக்கிறது. இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும். பெண்ணுரிமைச் சிந்தனையில் ஒவ்வொரு ஆணும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெரியார் மிக விளக்கமாக சொல்லியிருக்கிறார்.

மகளிர் நாள் என்பது பெண்கள் மட்டும் கொண்டாடுவதாக இல்லாமல், ஆண்களும் சேர்ந்து கொண்டாடக்கூடிய காலமாக அது மாற வேண்டும். கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், சமூகத்தில், சிந்தனையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி. அத்தகைய சிந்தனை மாற்றத்தை சமூகத்தில் விதைக்க இது போன்ற மகளிர் தின விழாக்கள் பயன்பட வேண்டும்” என கூறினார்.

இதையும் படிங்க: டூ வீலர் மெக்கானிக்காக சாதித்துவரும் தஞ்சை பெண் ஜெயராணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.