ETV Bharat / state

ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்; திடீர் போராட்டத்தால் பரபரப்பு

author img

By

Published : Jun 6, 2023, 7:40 PM IST

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் விதிகளை மீறி சிறார்கள் பணியமர்த்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு சரிவர ஊதியமும் வழங்கப்படாததால் சிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Child laborers protested against non payment of salary at Ambattur Aavin dairy farm
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சென்னை: அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஆவின்பால் மற்றும் உப பொருட்கள் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வரும், நிலையில் கோடை காலத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தியை பெருக்குவதற்காக தற்காலிகமாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமிப்பது வழக்கம்.

அந்தவகையில், கோவிந்தராஜன் என்பவருக்கு சொந்தமான ஹரிராம் எனும் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஆவடி பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறார்கள் ஐஸ் கிரீம் பேக் செய்யும் பணிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிறார்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து ஒப்பந்த நிறுவன உரிமையாளரான கோவிந்தராஜிடமும் ஆவின் நிர்வாக மேலாளர் ராஜசேகர் என்பவரிடமும் சிறார்கள் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் முறையான எந்த பதிலும் அளிக்கப்படாத நிலையில் சிறார்கள் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை வாயில் முன்பு அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிறுவனமான ஆவினில் அரசு விதிகளை மீறி சிறார்கள் வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஆவினில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிறார்களை பணியமர்த்திவிட்டு அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சிறார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர் ஒருவர் கூறுகையில், “கோடை காலத்தை முன்னிட்டு ஏற்கனவே சரிவில் இருந்த ஐஸ்கிரீம் விற்பனையை அதிகப்படுத்த கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுவதாக நிர்வாக மேலாளர் ராஜசேகர் என்பவர் என்னிடம் கூறினார். அனைவரும் சிறுவர்கள் என்பதால் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் என தான் கேட்ட பொழுது எந்தவித பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தான் பார்த்துக் கொள்வதாக கூறி பணியாளர்களை அழைத்து வந்து பணியில் சேர்த்துள்ளார்.

பின்னர் தங்களுக்கு ஏப்ரல், மே மாத சம்பளத்தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து கேட்ட பொழுது ஒப்பந்ததாரிடம் தான் பேசி ஏற்பாடு செய்து தருவதாக கூறிவந்த நிலையில் சில தினங்களாக வாட்ஸ் அப்பில் தன்னை பிளாக் செய்து விட்டார். இதனால் தொடர்ந்து அதிகாரியிடம் இது குறித்து முறையிட முடியவில்லை” என வேதனை தெரிவித்தனர்.

நீண்ட நாட்களாக இந்த பிரச்சனை இருந்து வந்த நிலையில் தீர்வு எட்டப்படாததால் தாங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பள்ளிக்கு செல்லும் தாங்கள் இந்த வருமானத்தில் தங்களுக்கு தேவையான சீருடைகள், பள்ளி கட்டணம் ஆகியவற்றை செலுத்த எண்ணி இருந்த நிலையில் சம்பளம் வழங்கப்படாததால் இது அனைத்தும் கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சிறார்களுக்கு ஊதியத்தை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: "அரசியல் செய்வதென்றால் வெளியே வாங்க": ஆளுநருக்கு சவால் விடும் தங்கம் தென்னரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.