ETV Bharat / state

‘அனைத்து தொகுதிகளிலும் ரூ.11 கோடி செலவில் 788 பணிகள் செயல்படுத்த திட்டம்’ - முதலமைச்சர் கூட்டத்தில் முடிவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2023, 8:53 PM IST

தமிழ்நாட்டில் 2023-24ஆம் ஆண்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 788 பணிகளை ரூ.11,239 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது என ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலை குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தினை அறிவித்தார்கள். இது குறித்து முதலமைச்சர் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கடந்த ஆக.22ஆம் தேதி அன்று எழுதிய கடிதத்தில் அவர்களது தொகுதிகளில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டச் செயலாக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை செப்.28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. அதன்படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சட்டப்பேரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான குழு சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து 1896 பணிகளை அரசுக்கு பரிந்துரை செய்தது.

பரிந்துரைக்கப்பட்ட பணிகள், சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அனைத்து துறைகளிடமிருந்தும் இது தொடர்பான விரிவான அறிக்கைகள் பெறப்பட்டன. அதன்படி, நடைமுறையில் உள்ள திட்டங்களுடன் இணைத்து செயல்படுத்தப்பட்டுவரும் பணிகள், 2023-24ஆம் ஆண்டில் செயல்படுத்த எடுத்துக்கொள்ளும் பணிகள், என வகைப்படுத்தப்பட்டு அப்பணிகளுக்கு செப்.8ஆம் தேதி அன்று அரசு தலைமைச் செயலாளர் தலைமையிலான பணிகளைத் தேர்வு செய்யும் குழு ஒப்புதல் அளித்தது.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் தலைமையில் இன்று (அக்.07) நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தின் அனுமதி வழங்கிடும் உயர்நிலைக் குழு கூட்டத்தில், இத்திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் ஆண்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 788 பணிகள் 11ஆயிரத்து 239 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன. மேலும், 2024-25ஆம் ஆண்டில் 203 பணிகள் 5ஆயிரத்து 901 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இக்கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் நா.முருகானந்தம், இ.ஆ.ப., திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் கே.கோபால், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன், இ.ஆ.ப., சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தினை மாவுப் பொருட்களின் விலை குறைகிறது.. 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.