ETV Bharat / state

தமிழ்நாட்டு மீனவர்கள் சிறைபிடிப்பு - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

author img

By

Published : Apr 6, 2023, 10:02 PM IST

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மருத்துவர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்கக் கோரியும் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் 109 படகுகளையும் விடுவித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் மருத்துவர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 12 இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய செயலைக் கட்டுப்படுத்திடவும், மீனவர்களின் மீன்பிடிப் படகினை விடுவித்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் மருத்துவர் எஸ். ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( ஏப்.6) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ஏப்.5ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏப்.1ஆம் தேதி அன்று 12 மீனவர்களுடன் (தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள், புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ) IND-PY-PK-MM-969 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றதாகவும், 5-4-2023 அன்று அதிகாலை 1-00 மணியளவில் கிழக்குக் கோடியக்கரை பகுதியில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் நான்கு மீனவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்குள்ளான மீனவர்களுக்குச் சொந்தமான 7 செல்போன்கள் மற்றும் மீன்களை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் இதுபோன்று அடிக்கடி தாக்குதல் நடத்துவது மிகுந்த கவலை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திடும் இலங்கைக் கடற்படையினரின் இத்தகைய போக்கினை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று கட்டுப்படுத்திடவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசின் வசமுள்ள 12 மீனவர்களையும், 109 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட தூதரக நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: உயர் கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகளில் 13,089 மாணவர்கள் உயிரிழப்பு; மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.