ETV Bharat / state

சென்னை நபரிடம் நூதன முறையில் ரூ.1.91 லட்சம் மோசடி செய்த பலே இளைஞர்கள்.. நீங்கள் உஷார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2023, 4:18 PM IST

Updated : Oct 8, 2023, 5:11 PM IST

Credit card fraud: சென்னையில் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகக் கூறி தகவல்களைப் பெற்று ரூ.1.91 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

chennai police arrested two people who claimed to be speaking from bank and defrauded the money from credit card
கிரெடிட் கார்டு மோசடி செய்த இருவர் கைது

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பத்மநாபா நகர் ஸ்ரீவாரி தெருவை சேர்ந்தவர் கற்பக ரமேஷ் (38). இவர் குரோம்பேட்டையில் உள்ள ரிலையன்ஸ் ஷோரூமில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தேசிய வங்கியில் இருந்து பெற்ற கடன் (கிரெடிட் கார்ட்) அட்டையை இவர் உபயோகப்படுத்தி வந்தார்.

இதனை எப்படியோ தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி இவரது தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு, தாங்கள் உபயோகப்படுத்தும் தேசிய வங்கியின் கடன் அட்டை பிரிவில் இருந்து பேசுவதாகக் கூறி, தங்களது கடன் அட்டையின் அளவை உயர்த்துவதாகக் கூறியுள்ளனர்.

முதலில் பேச தயங்கிய கற்பக ரமேஷ், மோசடிப் பேர்வழிகள் என்றால் இந்தி கலந்த அரை குறை தமிழில் தான் பேசுவார்கள். ஆனால் இவர்கள் சுத்தமான அழகிய தமிழில் பேசுகிறார்களே, அதனால் உண்மையிலேயே இவர்கள் வங்கியில் இருந்து தான் பேசுகிறார்கள் என்று நம்பத் தொடங்கினார். பின்னர் அவர்களது பேச்சில் மயங்கி, அவர்கள் கேட்ட ஓ.டி.பி எனப்படும் ரகசிய குறியீட்டு எண், கார்டு எண், சிவிவி நம்பர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் கொடுக்கத் தொடங்கினார்.

அவ்வாறு அவர் ரகசிய எண்ணை கொடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து, ரூபாய் 1,91,597 வேறு சில வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக, அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பக ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டதை அப்போது தான் உணர்ந்துள்ளார்.

எனவே, உடனடியாக அவர் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். மேலும், கற்பகரமேஷ் வங்கிக் கணக்கில் இருந்து பணம் மாறுதலாகி சென்றது எந்த வங்கிக் கணக்கு? அது யாருடையது என்று போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பணம் மாறுதலாகி சென்றது வேலூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, நரியம்பேட்டு பகுதியை சேர்ந்த முகமது கிஷார் ஹுசைன் (32) வங்கிக் கணக்கிற்கு என்பது தெரிய வந்தது. அதன் பிறகு வேலூருக்கு விரைந்த போலீசார் அங்கு வீட்டில் இருந்த நபரை கைது செய்து சங்கர் நகர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

மேலும், விசாரித்ததில் முகமது கிஷார் ஹுசைன்-க்கு உடந்தையாக இருந்தவர் சென்னை வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்த சிசிடிவி கேமரா டெக்னீசியன் ரவிக்குமார் (32) என்பது தெரியவந்ததை அடுத்து, போலீசார் ரவிக்குமாரை கைது செய்து இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதிக பணம் சம்பாதிக்க youtube பார்த்து நைசாக போனில் பேசி கற்பக ரமேஷிடம் இருந்து பணம் திருடியதை இருவரும் ஒப்புக் கொண்டனர். பணம் குறித்து கேட்டபோது பணம் வந்த 2 நாட்களில் பணம் அனைத்தையும் செலவு செய்து விட்டதாக கூலாக பதில் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கன்னியாகுமரி தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை மாணவி தற்கொலை.. சிக்கிய கடிதம்!

Last Updated :Oct 8, 2023, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.